
வாஷிங்டன், ஏப்ரல்-12- அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, நீண்ட காலமாக தீர்க்கப்படாமலிருக்கும் ஒரு முக்கியப் பிரச்னைக்கு தீர்வுக் காண முயன்று வருகிறது.
ஆம், விண்வெளிக்குச் செல்லும் வீரர்களின் மனிதக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பங்களை உருவாக்குவதே அதன் பெரிய சவாலாக உள்ளது.
இந்நிலையில், நிலவில் நீண்ட காலம் தங்கி ஆய்வு செய்யும் விண்வெளி வீரர்களின் மலம், சிறுநீர் மற்றும் வாந்தியை மறுசுழற்சி செய்யக்கூடிய தொழில்நுட்பத்தை உருவாக்க பொதுமக்களின் உதவியை அது நாடுகிறது.
அதற்காக 3 மில்லியன் டாலர் பரிசுப் பணத்தையும் நாசா அறிவித்துள்ளது.
எதிர்காலத்தில் பயன்படுத்தும் வகையில் அத்தொழில்நுட்பம் அமைந்திருக்க வேண்டுமென்பது நிபந்தனையாகும்.
நிலாவில் மனிதன் முதலில் கால் பதித்த ஆண்டான 1969-லிருந்து விண்வெளி வீரர்களின் மலம், சிறுநீர், வாந்தி உள்ளிட்ட மனிதக் கழிவுகள் 96 பைகளில் அடைக்கப்பட்டுள்ளன.
அவை நிலவின் மேற்பரப்பைத் தொடாமல் விண்ணில் மிதந்துகொண்டிருக்கின்றன.
இந்த மனிதக் கழிவுகளை மறுசுழற்சி செய்து, நீர், உரம் உள்ளிட்ட வளங்களாக மாற்றும் முயற்சியில், அமெரிக்காவின் அலபாமா பல்கலைக் கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சிப் பணிகளையும் நாசா தொடங்கியுள்ளது.
உணவுப் பொட்டலம், பயன்படுத்தப்பட்ட ஆடைகள், உடைந்த கருவிகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கியப் புதியக் கண்டுபிடிப்பு சாத்தியமானால், விண்வெளியில் மனிதக் கழிவுகளை பூமிக்கே திருப்பிக் கொண்டு வரத் தேவையிருக்காது என நாசா கூறுகிறது.