
துபாய், டிசம்பர் 27-டெலிகிராம் நிறுவனரும் கோடீஸ்வரருமான பாவெல் டுரோவ் (Pavel Durov), தந்தைத்துவத்தைப் பற்றிய வித்தியாசமான அணுகுமுறையை வெளிப்படுத்தியுள்ளார்.
அதாவது, தனது விந்தணு தானத்தின் மூலம் குழந்தை பெற விரும்பும் பெண்களுக்கு IVF செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சைக்கான செலவுகளை ஏற்கத் தயாராக இருப்பதாக அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
தன் உயிரியல் குழந்தைகள் அனைவரும் 17 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்திலிருந்து பங்குகளைப் பெறுவார்கள் என்றும், 41 வயதான டுரோவ், உறுதியளித்தார்.
ஆனால் அந்த உரிமை, அவர் மறைந்த பின் பல தசாப்தங்களுக்குப் பிறகே கிடைக்குமாம்.
விந்தணு தானம் மூலம் ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தையாகியிருப்பதாக டுரோவ் கூறி வருகிறார்.
3 துணைவியரிடமிருந்து அவருக்கு ஏற்கனவே 6 குழந்தைகளும் உள்ளனர்.
2010-ஆம் ஆண்டு, கருத்தரிக்க முடியாமல் தவித்த நண்பருக்கு உதவியதிலிருந்து, தனது விந்தணுவை தானம் செய்யத் தொடங்கியதாகக் கூறும் டுரோவ், உலகளவில் தரமான விந்தணுக்கள் குறைவாக உள்ளதால் தாம் தொடர்ந்து தானம் செய்து வருவதாகக் கூறிக் கொண்டார்.
இவரின் இந்த அறிவிப்பு, சொத்து செல்வம், மரபணு, குடும்பத்தின் எதிர்காலம் குறித்த உலகளாவிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.



