
சுபாங் ஜெயா, ஆகஸ்ட்-23- சுபாங் ஜெயா, SS17 பகுதியில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி விபத்தில் சிக்கியக் காரிலிருந்து, 7 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஷாபு வகை போதைப்பொருட்கள் சிக்கின.
அன்று காலை 11.30 மணி வாக்கில் விபத்து குறித்து பொது மக்கள் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸ் வந்துபார்த்த போது அந்த Honda Civic காருக்குள்ளேயோ அல்லது வெளியிலோ ஓட்டுநரைக் காணவில்லை.
இதையடுத்து சந்தேகத்தில் காரை பரிசோதித்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். 11 மூட்டைகளில் 208 பிளாஸ்டிக் பொட்டலங்களில் 220 கிலோ கிராம் எடையில் போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
சந்தேக நபரின் அடையாள அட்டையையும் போலீஸார் கண்டெடுத்தனர். அவ்வாடவர், கிளந்தான், ரந்தாவ் பாஞ்சாங்கைச் சேர்ந்த 32 வயது Mohd Rahmat Hanafi என அடையாளம் கூறப்பட்டது.
அவர் விட்டுச் சென்ற கார் போலி பதிவு எண் பட்டையைப் பயன்படுத்தியதும், அவருக்கு ஏற்கனவே 15 குற்றப்பதிவுகள் இருப்பதும் உறுதிச் செய்யப்பட்டது.
இன்னமும் உள்நாட்டில் தான் இருப்பதாக சந்தேகிக்கப்படும் அந்நபர் தீவிரமாகத் தேடப்படுகிறார்.