
கோலாலாம்பூர், ஜூலை-1 – விமான நிலையத்தில் ஓடுபாதைக்கு நகரும் முன்னர் ஒரு விமானத்தில் குளிரூட்டிகள் செயலிழந்ததால் அது திடீரென sauna எனப்படும் நீராவிக் குளியல் அறை போல மாறியது.
விமானப் பணியாளர்களைக் கேட்டால், தியானம் செய்யுங்கள் என பதில் வந்துள்ளது.
இது சில பயணிகளிடையே அதிர்ச்சியையும் எரிச்சலையும் ஏற்படுத்திய நிலையில், அவர்கள் விமானத்தில் உள்ள கையேடுகள் மற்றும் பத்திரிகைகளில் காற்று வீசி, தங்களைத் தாங்களே குளிர்வித்துக் கொண்டனர்.
ஜூன் 24-ஆம் தேதி பயணி ஒருவர் பதிவேற்றிய 26 வினாடிகள் கொண்ட டிக் டோக் வீடியோவில் தான், அவர்கள் ‘வியர்வை’ சிந்தும் இந்தக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அந்த வீடியோ வைரலாகி, நேற்று வரை 1.6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
வீடியோவில், ஒரு விமானப் பணிப்பெண் “சரி, நண்பர்களே, நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்கிறோம்” என பயணிகளிடம் கூறுவதைக் கேட்க முடிந்தது.
கடுப்பான ஒரு பயணி, “இங்கே 130 பாகை செல்சியஸுக்கு உடல் வெந்துபோகிறது, இந்த இலட்சணத்தில் தியானம் முக்கியமா?” என தனது வீடியோவில் எழுதியுள்ளார்.
உண்மையில், அந்த அளவுக்கெல்லாம் உள்ளே சூடு இல்லை; சுமார் 54 பாகை செல்சியஸ் என்ற அளவில் தான் இருந்தது; ‘தியானம்’ செய்யுங்கள் என்பது கூட அனைவரும் நிதானம் காக்க வேண்டும் என்பதற்கான ஒரு
சிலேடையாக சொல்லப்பட்டது தான் என, விமானப் பணிப் பெண் வீடியோவில் விளக்கமளித்தார்.
எனினும், அந்த விமான நிறுவனத்தின் பெயர், விமானம் எங்கே இருந்தது அல்லது அது எங்கு செல்கிறது என்ற விவரங்கள், அந்த வீடியோவின் கீழ் பதிவுச் செய்யப்படவில்லை.