
கோலாலம்பூர், ஜூலை 24 – இத்தாலியின் டொலோமைட்ஸ் மலைத் தொடரில் மலை ஏறியபோது தவறி கீழே விழுந்ததால், மலேசியாவைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கெடா சுங்கை பட்டாணி மெட்ரோ ஸ்பெஷலிஸ்ட் மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் காவ் பீ லிங் (Dr. Khaw Bee Ling) இம்மாதம் 18ஆம் தேதி Croda del Becco மலையை ஏறியபோது காணாமல் போய் விட்டதாக முதலில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தனது நண்பருடன் மலையேறிக் கொண்டிருந்த டாக்டர் காவ், ஒரு கட்டத்தில் தனித்தனியாக நண்பரை விட்டுவிட்டு தனியே மலையேறியுள்ளார்.
பின்பு தாம் வழிதவறி வந்துவிட்டதாகவும் உடனடி உதவி தேவைப்படுவதாகவும் ஒரு குறுஞ்செய்தியை நண்பருக்கு அனுப்பியும் உள்ளார்.
நண்பரின் புகாரை தொடர்ந்து, உள்ளூர் மீட்புக் குழு பணியாளர்கள் மேற்கொண்ட தேடல் நடவடிக்கையில், அம்மருத்துவர் பாறைகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டு உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இத்தாலி அதிகாரிகள் டாக்டரின் உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.