
புத்ராஜெயா, நவம்பர்-15, வெளிநாட்டினரை திருமணம் செய்த மலேசியத் தாய்மார்கள் இனி வெளிநாட்டில் பிறந்த தங்கள் குழந்தைகளுக்கு இயல்பாகவே மலேசியக் குடியுரிமையைப் பெற முடியும்.
இந்த வரலாற்றுப்பூர்வ மாற்றம் அடுத்தாண்டு மத்தியில் நடைமுறைக்கு வரும் என உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதையொட்டி, புதிய பதிவு படிவங்கள், கணினி முறை மேம்பாடுகள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள தூதரகங்களுக்கு அறிவிப்பு அனுப்பும் பணிகள் தொடங்கியுள்ளன.
அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு கடந்தாண்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்ததை அடுத்து இது சாத்தியமாகியுள்ளதாக சைஃபுடின் சொன்னார்.
தேசிய சட்டத்துறை அலுவலகம் தற்போது சட்ட மறுஆய்வுகள் மற்றும் அமைப்பு புதுப்பிப்புகளை இறுதிச் செய்து வருகின்றது என்றார் அவர்.
அனைத்தும் 2026 மத்தியில் நிறைவடைந்ததும், வெளிநாட்டு ஆண்களைத் திருமணம் புரிந்து வெளிநாட்டிலேயே வசிக்கும் மலேசியப் பெண்கள், அங்கு பிறக்கும் தங்கள் குழந்தைகளுக்கு தூதரங்களில் பிறப்புப் பத்திரத்திற்கு பதியலாம்.
பிறப்புப் பத்திரத்தில் அக்குழந்தைகள் மலேசியக் குடிமக்கள் என குறிப்பிடப்படுவர்.
பாலின சமத்துவத்தை முன்னிறுத்தும் முக்கிய முன்னேற்றமான இந்த வரலாற்றுப்பூர்வ சட்டத் திருத்தம், மலேசியத் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கான எதிர்காலத்தை பாதுகாக்கும் உரிமையை பெற வகை செய்கிறது.



