
கோலாலம்பூர், பிப்ரவரி-23-குவாலா திரங்கானுவிலிருந்து காஜாங் புறப்படவிருந்த இரு அடுக்கு விரைவு பேருந்து, சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ அதிகாரிகள் சோதனையில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்றிரவு 10.30 மணிக்கு சீனப் புத்தாண்டு Ops சோதனையின் போது பேருந்தின் டயர் தேய்மானம் கண்டிருந்தது கண்டறியப்பட்டதே அதற்குக் காரணம்.
அனுமதிக்கப்பட்ட குறைந்தபட்ச டயர் தடிமான அளவு 1.6 மில்லி மீட்டராக உள்ள நிலையில், அப்பேருந்தின் 2 பின் பக்க டயர்களும் 1.25 மில்லி மீட்டர் தடிமானத்தை மட்டுமே கொண்டிருந்தன.
இது பாதுகாப்பு விதிகளை மீறியது என்பதால் பேருந்து இயக்கம் தடைச் செய்யப்பட்டது.
இதனால் பேருந்தில் இருந்த 65 பயணிகள் சுமார் ஒரு மணி நேரம் குவாலா திரங்கானு மாநகர மன்ற பேருந்து முனையத்திலேயே சிக்கித் தவித்தனர்.
பின்னர், அதே பேருந்து நிறுவனம் மாற்று பேருந்தை ஏற்பாடு செய்து பயணிகளை அவர்களின் இலக்கிற்கு அனுப்பி வைத்தது.



