இந்தியா, செப்டம்பர் 11 – ஜெயம் ரவி தனது மனைவியைப் பிரிவதாகக் கடந்த ஒன்பதாம் திகதி அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியை கொடுத்திருந்தார்.
முதலில், அவரது மனைவி ஆர்த்தி எந்த கருத்தும் தெரிவிக்காமலிருந்த சூழலில், இன்று அவர் வெளியிட்டிருக்கும் விளக்கத்தை வைத்து ஜெயம் ரவியை ரசிகர்கள் கேள்விகளால் சமூக வலைத்தளங்களில் வெளுத்து வாங்கி வருகின்றனர்.
18 வருடங்களுக்கு மேலான தங்களின் திருமண வாழ்க்கையிலிருந்து விலகுவதாகவும்; நெஞ்சம் கசந்து எடுத்த கனமான முடிவு இதுவென்றும், முன்னதாக ஜெயம் ரவி உருக்கத்துடன் தனது விவகாரத்தைத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று நடிகர் ஜெயம் ரவி வெளியிட்ட அறிக்கை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று குறிப்பிட்டு, அவரது மனைவி ஆர்த்தி அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதில், இது என் கவனத்துக்கு வராமலும் என் ஒப்புதல் இல்லாமலும் எடுக்கப்பட்ட முடிவு என்றும், திருமண பந்தத்திலிருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தைச் சார்ந்து அவராகவே எடுத்த முடிவே என்றும், தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த சோதனையிலிருந்து மீண்டு வர அனைவரின் பிரார்த்தனைகளும் துணை நிற்க வேண்டும் என்று அவர் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்வதாகக் குறிப்பிட்டிருந்தார்.