
லண்டன், அக்டோபர் -13,
குழந்தைகள் மத்தியில் அதிகரித்து வரும் விவேகக் கைப்பேசிகளின் பயன்பாட்டால், அவர்களின் பேசும் மற்றும் கேட்கும் திறன்கள் பாதிக்கப்படுகின்றன.
குழந்தைகளின் தகவல் தொடர்பு திறன்களில் விவேகக் கைப்பேசிகளின் தாக்கம் குறித்து இங்கிலாந்தில் வணிகத் தலைவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அது கண்டறியப்பட்டது.
சதா காலமும் விவேகக் கைப்பேசிகளில் மூழ்கிக் கிடப்பதால், வளர வேண்டிய வயதில் குழந்தைகளுக்கு அத்தியாவசியமானதான பேச்சுத் திறனும் கேட்கும் திறனும் தடைப்படுகிறது.
மூன்றில் இரண்டு பங்கு வணிகத் தலைவர்கள், விவேகக் கைப்பேசிகள் குழந்தைகளின் பேச்சுத் திறனுக்குத் தீங்கு விளைவிப்பதாகக் கவலைத் தெரிவித்துள்ளனர்.
இவ்வாண்டு பிப்ரவரி – மார்ச் மாதங்களில் வணிக முடிவெடுக்கும் பொறுப்பிலுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் அந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இஃது ஒரு முக்கியமான பிரச்னை என்பதால் பிரிட்டன் அரசின் தலையீடு அவசியமென, ஆய்வை நடத்திய வாய்மைக் கல்வி ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை வலுப்படுத்தி, பள்ளி மாணவர்களுக்குப் பேசும் மற்றும் கேட்கும் திறனுக்கான முறையான மதிப்பீடுகளை அறிமுகப்படுத்தவும் அவ்வாணையம் பரிந்துரைத்துள்ளது.