
கோலாலாம்பூர், டிசம்பர் 22-வீட்டுக் காவல் விண்ணப்பம் தொடர்பில் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கு எதிராக நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பைக் கொண்டாடிய DAP-யின் பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் Yeo Bee Yin-னுக்கு, தேசிய முன்னணி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நஜீப்பை வீட்டுக் காவலில் வைக்க வேண்டுமென்ற கூடுதல் அரச உத்தரவு செல்லாது என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் முன்னதாக தீர்ப்பளித்தது.
இதனால் அவர் மீண்டும் காஜாங் சிறைக்கே அனுப்பட்டார்.
அம்னோ- தேசிய முன்னணி தலைவர்களும் தொண்டர்களும் இத்தீர்ப்பால் ஏமாற்றமடைந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சருமான Yeoh Bee Yin “இந்த ஆண்டு இறுதியைக் கொண்டாட மற்றொரு காரணம்” என ஃபேஸ்புக்கில் பதிவிட்டு சர்ச்சையை கிளப்பினார்.
சினமடைந்த தேசிய முன்னணி பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ Dr சம்ரி அப்துல் காடிர், “இதை ஏன் கொண்டாட வேண்டும்? மற்றவர்களின் துன்பங்களைக் கொண்டாடாதீர்கள். வாழ்க்கை ஒரு வட்டம். உங்கள் தலைவர்களும் தவறிழைக்க முடியாதவர்கள் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ Dr முஹமட் அக்மால் சாலேவும் Yeo Bee Yin-னைக் கடுமையாக சாடியிருந்தார்.
“இன்னும் எதற்காக நாம் காத்திருக்க வேண்டும்? உடனே இந்த அரசாங்கத்துக்கான ஆதரவை மீட்டுக் கொள்வோம். இந்த ‘முட்டாள்களால்’ அவமானப்படுவதற்கு பேசாமல் கண்ணியமிக்க எதிர்கட்சியாக இருந்து விட்டு போகலாம்” என அக்மால் காட்டமாக பேசியிருந்தார்.
சட்ட விவகாரங்களை அரசியல் பிரச்சாரமாக மாற்ற வேண்டாம் Yeo Bee Yin-னுக்கு மேலும் பல BN தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



