லண்டன், டிசம்பர்-3 – பிரிட்டனின் மேற்கு லண்டனில் வசிக்கும் 10 வயது இந்திய வம்சாவளி சிறுவன் கிரிஷ் அரோரா, IQ சோதனையில் 162 மதிப்பெண்களைப் பெற்று, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளான்.
உலகமே போற்றும் அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein) கூட 160 மதிப்பெண்களையே பெற்ற நிலையில், அவரையே மிஞ்சியுள்ளான் இந்த அசாதாரண அறிவு ஜீவி மாணவன்.
பொறியியல் பின்புலத்தைக் கொண்ட கிரிஷின் பெற்றோர்கள் மௌலி-நிஷால் தம்பதியர், 4 வயதாக இருக்கும் போதே மகனின் அசாதாரண அறிவாற்றலைக் கண்டறிந்துள்ளனர்.
அச்சிறிய வயதிலேயே சரளமாக படித்துக் காட்டியதோடு, கணிதப் புத்தகங்களை கரைத்துக் குடித்து, டெசிமல் (Decimal) கணக்குகளை எல்லாம் எளிதாக செய்து முடித்து கிரிஷ் ஆச்சரியமூட்டியுள்ளான்.
அவனது திறமை கணிதத்தோடு நின்றுவிடவில்லை.
ஆரம்பப் பள்ளியிலேயே கடினமான வார்த்தைப் புதிர்களைக் கூட ஓரிரண்டு நிமிடங்களில் கண்டுபிடித்து விடுவான்.
தவிர, chess எனும் சதுரங்க விளையாட்டைக் கற்றுக் கொண்ட நான்கே மாதங்களில், 1,600 FIDE புள்ளிகளை வைத்திருந்த தனது குருவையே கிரிஷ் தோற்கடித்துள்ளான்.
இசைத் துறையையும் அவன் விட்டு வைக்கவில்லை.
வெறும் ஒன்றரை ஆண்டுகளில் பியானோவைக் கற்றுத் தேர்ந்து 8-வது கிரேட் தகுதியை அடைந்துள்ளான்.
அடுத்தாண்டு Barnet-டில் உள்ள எலிசபெத் அரசியார் பள்ளியில் படிப்பைத் தொடரவுள்ள கிரிஷ், தனது புத்திக் கூர்மையால் அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்டே தங்களை அன்புத் தொல்லை செய்து வருவதாக அவனது பெற்றோர் சிரித்துக் கொண்டே ஆனால் பெருமிதத்துடன் கூறுகின்றனர்.