
கோலாலம்பூர், ஆக 20 – வெளிநாட்டு தொழிலாளர் ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்களை மீண்டும் திறக்க அரசாங்கம் முடிவு செய்துள்ள போதிலுட்ம குறிப்பிட்ட துறைகள் மற்றும் துணைத் துறைகளுக்கு மட்டுமே இந்த அனுமதி இருக்கும் என்று உள்துறை அமைச்சர் சைபுடின் நசுடியோன் இஸ்மாயில் ( Saifuddin Nasution Ismail ) தெரிவித்தார்.
தனது அமைச்சிற்கும் மனிதவள அமைச்சிற்குமிடையிலான கூட்டுக் குழு கூட்டத்திற்குப் பிறகு, மூன்று துறைகள் மற்றும் 10 துணைத் துறைகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சுகள் முன்மொழிவுகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் மீண்டும் திறக்கப்படும் என்று சைபுடின் கூறினார்.
அங்கீகரிக்கப்பட்ட துறைகள் விவசாயம், தோட்டக்கலை மற்றும் சுரங்கம், அவற்றுடன் தொடர்புடைய அனைத்து துணைத் துறைகளும் அடங்கும் என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
தனித்தனியாக, சேவைத் துறையின் கீழ், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்ட துணைத் துறைகள் மொத்த மற்றும் சில்லறை விற்பனை, கிடங்கு, பாதுகாப்பு சேவைகள், பழைய உலோகப் பொருட்கள் , உணவகங்கள், சலவை நிலையங்கள், சரக்கு கையாளுதல் மற்றும் துப்புரவு சேவைகள் ஆகும்.
கட்டுமானத்திற்கு, அரசாங்க திட்டங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும், அதே நேரத்தில் உற்பத்தித் துறையின் கீழ், மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் புதிய முதலீடுகளை உள்ளடக்கிய வணிகங்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படும்.
இதற்கு முன் முதலாளிகள், முகவர்கள் மற்றும் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். இப்போது மூன்று துறைகள் மற்றும் 10 துணைத் துறைகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அவர் கூறினார்.