
தெஹ்ரான் – ஜூலை-15 – இஸ்ரேலும் ஈரானும் சனிக்கிழமை இரவு முழுவதும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளன.
இன்று அதிகாலை வரையிலும் அங்கு வெடிச்சத்தம் கேட்டது. இஸ்ரேலில் எரிபொருள் கிடங்குகள், மின் உற்பத்தி மையங்கள் போன்றவற்றை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதில், இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர்.
அதே சமயம் தெஹ்ரானில் உள்ள இராணுவத் தளங்களை இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி தாக்கியதில் மரண எண்ணிக்கை 80-தை எட்டியுள்ளது.
ஈரான் தற்காப்பு அமைச்சின் தலைமையகக் கட்டடமும் சேதங்களைச் சந்தித்துள்ளது.
அமெரிக்காவின் ஆதரவோடு களமிறங்கியுள்ள இஸ்ரேல் வாரக் கணக்கில் இத்தாக்குதலைத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரானின் உச்சத் தலைவர் அயதொல்லா கொமேனியின் சாம்ராஜ்யத்தை சாய்க்கும் வரை ஓரிடம் விடாமல் அனைத்தையும் தாக்கி அழிப்போம் என, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு சூளுரைத்திருப்பதே அதற்குக் காரணம்.
அதே வேளை, ஈரானும் பதில் தாக்குதல்களைத் தொடரும் என்பதால்,
ஆயுத உற்பத்தி வசதிகளுக்கு அருகில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் உத்தரவுகளை இஸ்ரேல் பிறப்பித்துள்ளது.
இதற்கிடையில், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பில் ஓமானில் வாரக்கடைசியில் நடைபெறவிருந்த அமெரிக்கா – ஈரான் இடையிலான அடுத்த சுற்று பேச்சுவார்த்தையும் இரத்தாகியுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடருரும் சமயத்தில் அப்பேச்சு வார்த்தைகளை நியாயப்படுத்த முடியாது என ஈரானிய வெளியுறவு அமைச்சர் கூறினார்.
அணுசக்தி ஒப்பந்தத்திற்கு உடன்படாத வரையில் மோசமான விளைவுகளை ஈரான் சந்திக்க வேண்டி வருமென, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மிரட்டியுள்ளதும் கவனிக்கத்தக்கது.