
ஜோகூர் பாரு, மார்ச்-21 -ஜோகூர் பாருவில் நேற்று மாலை வெள்ளம் மோசமானதால், அம்மாநகர் சாலைகளில் போக்குவரத்தும் வழக்கத்திற்கு மாறாக நிலைக் குத்தியது.
அடைமழையைத் தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்ததால் பல சாலைகள் மூடப்பட்டதே அதற்குக் காரணம்.
மாலை வேலை முடிந்து வீடு திரும்ப முயன்ற ஏராளமான வாகனங்கள் கடும் நெரிசலில் சிக்கிக் கொண்டன.
முஸ்லீம்கள் பலர் வாகனங்களிலேயே நோன்புத் துறக்கும் நிலை ஏற்பட்டது.
இரவு 11 மணியாகியும் வீடு போய் சேரவில்லை என பலர் சமூக ஊடகங்களில் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டனர்.
ஜோகூர் பாருவில் இது போன்ற மோசமான நெரிசல் அரிது எனக் கூறப்பட்டது.
ஜோகூரில் நேற்று மாலை விடாது பெய்த மழையால் ஜோகூர் பாரு, கோத்தா திங்கி, குளுவாங், கூலாய், பொந்தியான் ஆகிய 5 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.
இதையடுத்து சுமார் 80 தற்காலிகத் துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டு, 5,000-க்கும் மேற்பட்டோர் அங்கு தஞ்சமடைந்தனர்.