வெள்ள சேதப் பணிகளைச் சரி செய்வதற்கு RM500 மில்லியன் ஒதுக்கீடு – பிரதமர் அன்வார் இப்ராஹிம்

கோலாலம்பூர், டிசம்பர் 2 – அண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகள், மருத்துவமனைகள், சாலைகள் மற்றும் அடிப்படை வசதிகளை சரிசெய்வதற்காக 500 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
இந்நிலையில், வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை உடனே ஆய்வு செய்து, பழுது பார்க்கும் பணிகளை தொடங்க வேண்டுமென்று அனைத்து மாநில மற்றும் கூட்டாட்சி துறைகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனமான NADMA, 12,000-க்கும் மேற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, 150 இடமாற்று மையங்களை அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2026 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் கல்விக்கு 66.2 பில்லியன் ரிங்கிட் தொகையும், சுகாதாரத்துறைக்கு 46.5 பில்லியன் ரிங்கிட் தொகையும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் 4,500 ஒப்பந்த மருத்துவர்கள் நிரந்தரப்படுத்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
மேலும் 43 வெள்ளத் தடுப்பு திட்டங்களுக்கு 2.2 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடும், Nadma-விற்கு 460 மில்லியன் ரிங்கிட்டும் வழங்கப்பட்டது.
அதே நேரத்தில் சபா மற்றும் சரவாக்கில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுவதைத் தொடர்ந்து, “Belanjawan Rakyat” எனப்படும் இந்த 470 பில்லியன் ரிங்கிட் பட்ஜெட் மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி வருகின்றது.



