ஜியோர்ஜ்டவுன், அக்டோபர்-3, சபா, லாஹாட் டத்துவில் வேலையிட பகடிவதை தாங்காமல் உடற்கூறு நிபுணர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுவதை விசாரிக்க பணிக்குக் குழு அமைக்கப்பட்டுள்ளதை, செனட்டர் Dr RA லிங்கேஷ்வரன் வரவேற்றுள்ளார்.
சுகாதார அமைச்சின் (KKM) அம்முடிவு காலத்திற்கேற்ற சரியான நடவடிக்கை என்றார் அவர்.
சுயேட்சை உறுப்பினர்களைக் கொண்ட அச்சிறப்புப் பணிக்குழுவில் துறை சார் நிபுணர்கள் இடம் பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது.
கண்காணிப்புக்காக KKM அதிகாரி ஒருவரும் அதில் இடம் பெற்றால் கூடுதல் சிறப்பாக இருக்குமென லிங்கேஷ் சொன்னார்.
அதே சமயம் தனக்கு சில கேள்விகள் இருப்பதையும் அவர் மறுக்கவில்லை.
இதே போல் 2022-ஆம் ஆண்டில் பினாங்கில் நிகழ்ந்த ஒரு சம்பவத்துக்குப் பிறகு அப்போதைய அரசாங்கத்தால் ஒரு குழு அமைக்கப்பட்டது.
11 பரிந்துரைகளை முன் வைத்த அதன் ஆய்வறிக்கை என்னவாயிற்று? அவை அமுல்படுத்தப்பட்டனவா ? அல்லது அப்படியே கிடப்பில் போடப்பட்டதா? என Dr லிங்கேஷ்வரன் கேள்வியெழுப்பினார்.
எனவே வேலையிட பகடிவதைப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகளை, புதிதாக அமைக்கப்பட்டுள்ள பணிக்குழு முன் வைத்து, அவற்றை அரசாங்கம் அமுல்படுத்தும் என தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாக செனட்டர் Dr லிங்கேஷ் அறிக்கையொன்றில் கூறினார்.
லாஹாட் டத்து மருத்துமனையின் இராசயண உடற்கூறு நிபுணரான Dr Tay Tien Yaa என்பவர்,
துறைத் தலைவரின் பகடிவதை தாங்காது, ஆகஸ்ட் 29-ஆம் தேதி லாஹாட் டத்துவில் உள்ள வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக முன்னதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.