
வைரலான வீடியோ: ஜாலான் துன் ரசாக்கில் மோட்டார் சாகசம்; இளைஞர்கள் கைது
கோலாலம்பூர், பிப்ரவரி 9
ஜாலான் துன் ரசாக் பகுதியில் உயிருக்கு ஆபத்தான வகையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சாகசம் செய்த இரண்டு இளைஞர்களின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.
14 விநாடிகள் கொண்ட அந்த வீடியோவில், யமஹா மோட்டார் சைக்கிளை ஓட்டிய 18 வயது இளைஞன் முன்சக்கரத்தை தூக்கி ஓட்டும் போது, பின்னால் அமர்ந்திருந்த 15 வயது சிறுவன் தனது தலை சாலையில் இழுத்துச் செல்லும் ஆபத்தான செயலில் ஈடுபட்டது பதிவாகியுள்ளது என்று கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை (JSPT) தலைவர் Asisten Komisioner Mohd Zamzuri Mohd Isa தெரிவித்தார்.
இந்த சம்பவம் ஜனவரி 30 ஆம் தேதி அதிகாலை ஜாலான் துன் ரசாக் பகுதியில் நடந்ததாக நம்பப்படுகிறது. மேலும் அந்த வீடியோ முகநூலில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இரு இளைஞர்களும் சிலாங்கூர் சுங்கை புலோ பகுதியில் கைது செய்யப்பட்டனர்.
இச்சம்பவத்தின் போது, பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதே நேரத்தில் இந்த வழக்கு, சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு மேல் விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.



