
கோலாலம்பூர், மார்ச் 19 – ஷம்ரி வினோத் மற்றும் அருண் துரைசாமி ஆகியோரை வித்தியாசமாக நடத்தியதாகக் கூறப்படுவதை போலீஸ் துறை மறுத்ததுடன், சட்டத்திற்கு ஏற்பவே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வலியுறுத்தியது.
குற்றவியல் சட்டத்தின் 505 (b) விதியின் கீழ் நான்கு தனிப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்ட போதிலும் , அவற்றில் ஒரு விவகாரம் 1948ஆம் ஆண்டின் நிந்தனை சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்டிருந்ததாக போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் ( Mohd Khalid Ismail ) தெரிவித்தார்.
சிலருக்கு மட்டும் ஏன் கைவிலங்கு இடப்பட்டது, மற்றவர்களுக்கு ஏன் இடப்படவில்லை என்பது குறித்த பொதுமக்களின் கேள்விகளினால் , பாகுபாடு காட்டப்படும் பிரச்சினை எழுந்ததைத் தொடர்ந்து அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் போலீஸ் படைத் தலைவரின் பதில் அமைந்தது.
குற்றங்கள் வேறுபடுகின்றன. சில ஜாமின் வழங்கக்கூடியதாகவும் சிலவற்றுக்கு ஜாமின் வழங்க முடியாததாகவும் இருந்தன.
இந்த நடவடிக்கைகள் சட்ட விதிகளின் அடிப்படையில் எடுக்கப்படுவதாக இன்று புக்கிட் அமானில் செய்தியாளர்களிடம் முகமட் காலிட் விவரித்தார்.
வழக்குகள் வித்தியாசமாக நடத்தப்படுவதாக பொதுமக்கள் கருதக்கூடும், ஆனால் சட்ட விதிகளின்படியே போலீசார் செயல்பட்டு வருகின்றனர். அனைத்து வழக்குகளிலும் போலீஸ் தொடர்ந்து சட்ட விதிகளின்படியே செயல்படும் என்றும் முகமட் காலிட் உறுதியளித்தார்.
இறுதியில், சட்ட அமலாக்கமானது சட்டத்தின் விதிகளையும் விசாரணையின் தேவைகளையும் பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.



