
ஷா அலாம், ஜன 9 – ஷா அலாம் புக்கிட் பண்டாராயா, செக்சன் U 11இல் மழை நீர்த் தேக்க குளத்தில் வயதான மாதுவின் சடலம் ஒன்று புதன்கிழமை மிதந்து கொண்டிருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.
அந்த குளத்திற்கு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த பொதுமக்களிடமிருந்து அந்த சடலம் குறித்த தகவலை காலை மணி 11.30 அளவில் பெற்றதாக ஷா அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் துணைக் கமிஷனர் ரம்சே இம்போல் ( Ramsay Embol ) தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அந்த குளத்திற்கு சென்ற ஷா அலாம் போலீஸ் தலைமையகத்தை சேர்ந்த போலீஸ் குழுவினர் 70 வயது மதிக்கத்தக்க மாதுவின் சடலத்தை மீட்டனர்.
அந்த மாது அருகேயுள்ள வீடமைப்பு பகுதியில் குடியிருந்தவர் என நம்பப்படுவதோடு 48 மணி நேரத்திற்கு முன்னதாக அவர் இறந்திருக்கலாம் என Ramsay வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் சடலம் மீட்கப்பட்ட அதே நாளில் மாலை ஆறு மணியளவில் போலீசை தொடர்பு கொண்ட ஒரு குடும்பத்தினர் நீர்த் தேக்க குளத்தில் இறந்து கிடந்த பெண்மணி தங்களது சகோதரி என்றும் அவர் அருகேயுள்ள குடியிருப்பு பகுதியில் தனியாக வசித்து வந்ததாக போலீசிடம் தெரிவித்தனர் என Ramsay சுட்டிக்காட்டினார்.



