
ஷா ஆலாமில் பெண் வேடமிட்டு திருட முயன்ற ஆடவன்: CCTV காட்சியில் தந்திரம் வெளிச்சமானது
ஷா ஆலாம், பிப்ரவரி 19 –
ஷா ஆலாம் செக்க்ஷன் 7 வர்த்தக மையம் அருகிலுள்ள மாணவர்கள் வாடகைக்கு வசிக்கும் வீட்டில், பெண் உடை அணிந்து தலையில் துணி போர்த்தி கைப்பை ஏந்தியபடி புகுந்து திருட முயன்ற நபரின் செயல் CCTV காட்சிகள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மாலை 7.20 மணியளவில் போலீசில் புகார் பெறப்பட்டதாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ராம்சே எம்போல் (Assistant Commissioner Ramsay Embol) தெரிவித்தார்.
CCTV பதிவுகளின்படி, நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அடையாளம் தெரியாத ஆண் நபர் உள்ளே புகுந்துள்ளார். அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்க பெண் வேடமிட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் எவ்வித பொருள் இழப்பும் ஏற்படவில்லை என்றாலும் சந்தேகநபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு மேல் விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.



