
ஸ்கூடாய் பாலசுப்ரமணியர் ஆலயத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற தைப்பூசத் திருவிழா
ஸ்கூடாய், பிப்ரவரி-8,
65 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஜோகூர், ஸ்கூடாய் அருள்மிகு ஸ்ரீ பாலசுப்ரமணியர் ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா 3 நாள் வைபவமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.
வெள்ளி, சனிக்கிழமைகளில் நூற்றுக்கணக்கானோர் பால்குடம் ஏந்தி வேண்டுதலை நிறைவேற்றினர்.
தைப்பூசத் திருநாளன்று அதிகாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பால்குடம் ஏந்தி வந்ததோடு, காலை 9 மணி முதல் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தாமான் ஸ்ரீ ஸ்கூடாய் முத்து மாரியம்மன் ஆலயத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
ஜொகூர் மாநிலத்தின் முக்கிய முருகன் ஆலயங்களில் ஒன்றான இவ்வாலயத்தில் நடைபெற்ற விழாவில், அரசியல் மற்றும் சமூக பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
அவ்வகையில், ஜோகூர் ஆட்சிக் குழு உறுப்பினரும் மாநில ம.இ.கா தலைவருமான ரவின்குமார் கிருஷ்ணசாமி, இஸ்கண்டார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினரும் நிதித் துறை துணையமைச்சருமான லியூ சின் தோங் (Liew Chin Tong), சுல்தானா ரொகாயா அறக்கட்டளையின் தலைவர் டத்தோ ஆர். சுகுமாறன், ஜோகூர் போலீஸ் ஆணையர் டத்தோ Abd Rahman Arsad உள்ளிட்டோருக்கு ஆலயத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது.
ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்பதால் சிங்கப்பூரிலிருந்தும் ஏராளமான சுற்றுப் பயணிகள் வருகை தந்தனர்.
சுமார் இருபதாயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதோடு, இரவில் ஸ்கூடாய் நகரைச் சுற்றி நடைபெற்ற இரத ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று விழாவை சிறப்பித்ததாக, ஆலயத் தலைவர் டத்தோ கே.எஸ். பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.



