கோலாலம்பூர் – காரில் இறந்து கிடந்த பெண்ணின் உடலில் இருந்து இரு நகைகளை திருடியதாக கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை லான்ஸ் கார்ப்பரல் நிலையிலுள்ள போலீஸ்காரர் ஒருவர் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மறுத்தார். அக்டோபர் 1ஆம் தேதி வங்சா மாஜூ , ஜாலான் பிரிமா ஸ்தாப்பாக்கில் தனது காரில் இறந்து கிடந்த
நுர் பர்ஹானா நிஷா சயஸ்வான் ( Nur Farhnana Nisha Syazwan ) என்ற பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கலி மற்றும் கை சங்கலியை Lans Kopral முகமட் அலிபா முகமட் ஷாபி ( Mohd Alifah Mohd Sapie ) திருடியதாக மாஜிஸ்திரோட் எம்.எஸ் அருண்ஜோதி முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டது.
குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 7 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இவையிரண்டும் விதிக்கப்படும் தண்டனைச் சட்டத்தின் 379 ஆவது விதியின் கீழ் அந்த நபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. 3,500 ரிங்கிட் ஜாமினில் அந்த ஆடவர் விடுவிக்கப்பட்டதோடு அவர் மீதான குற்றச்சாட்டு ஜனவரி 22ஆம் தேதி மீண்டும் மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.