
போர்ட் கிள்ளான், ஜனவரி-23- ஸ்பெயின் நாட்டிலிருந்து சுமார் 50 டன் எடையில் பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சியை மலேசியாவுக்குள் கடத்தி கொண்டு வரும் முயற்சியை, அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.
கிள்ளான் துறைமுகத்தில் ஜனவரி 20-ஆம் தேதி வந்திறங்கிய 2 கொள்கலன்களை பரிசோதனை செய்த போது, 660,137 ரிங்கிட் மதிப்பிலான அந்த இறைச்சிகள் பிடிபட்டன.
அத்தகையப் பொருளை மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள 14 நாடுகளில் ஸ்பெயினும் ஒன்றாகும்.
இந்த சட்டவிரோத இறக்குமதிகள், வரும் சீனப் புத்தாண்டுக்கு உள்ளூர் சந்தை தேவையை பூர்த்திச் செய்யும் நோக்கில் செய்யப்பட்டிருக்கலாம் என, AKPS எனப்படும் எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் கூறியது.
இதையடுத்து இறக்குமதி செய்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, AKPS தலைமை இயக்குநர் டத்தோ ஸ்ரீ Shuhaily Zain தெரிவித்தார்.
அந்த உள்ளூர் இறக்குமதியாளரின் பெர்மிட் காலாவதியாகி விட்டதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
இந்த பன்றி இறைச்சி பறிமுதல், ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாகும்.
முன்னதாக ஜனவரி 14-ஆம் தேதி பெல்ஜியம் நாட்டிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 27 டன் எடையிலான பன்றி இறச்சிகள், முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் பறிமுதல் செய்யப்பட்டன.



