
செர்டாங், மார்ச்-29- சிலாங்கூர், ஸ்ரீ கெம்பாங்கான், செர்டாங் பெர்டானாவில் தனியாக நடந்துச் சென்ற நிலையில் மீட்கப்பட்டு டிக் டோக்கில் வைரலான 3 வயது பெண் குழந்தை, பாதுகாப்பாகப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டாள்.
செர்டாங் போஸீஸ் தலைவர் துணை ஆணையர் AA.அன்பழகன் அதனை உறுதிப்படுத்தினார்.
முன்னதாக விடியற்காலை 3.40 மணியளவில் கையில் 2 ரிங்கிட் தாளுடன் அக்குழந்தை தனியாக நடந்துச் செல்வதைக் கண்டு, 27 வயது ஆடவர் அதிர்ச்சியடைந்தார்.
தன் வீட்டு விவரங்களை சொல்லத் தெரியாததால், அக்குழந்தையை அவர் ஸ்ரீ கெம்பாங்கான் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றார்.
இதையடுத்து செர்டாங் போலீஸ் தலைமையகம் உடனடி விசாரணையை மேற்கொண்டது.
அப்போது, வீட்டில் தாய் தந்தைக்குத் தெரியாமல், பூட்டப்படாத கதவின் வழியாக வீட்டை விட்டு அக்குழந்தை வெறியேறியது, விசாரணையில் கண்டறியப்பட்டது.
அந்த அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாவலர் சாவடியிலிருந்து சுமார் 100 மீட்டர் தூரம் குழந்தை தனியே நடந்தே சென்றுள்ளது.
நல்லவேளையாக அது பாதுகாப்புடன் மீட்கப்பட்டதாக அன்பழகன் கூறினார்.
வீட்டில் குழந்தையைக் காணாது தேடிய பெற்றோர், காலை 7.50 மணிக்கு புகாரளிப்பதற்காக ஸ்ரீ கெம்பாங்கான் போலீஸ் நிலையம் சென்றனர்.
குழந்தையின் பிறப்புப் பத்திரம் மற்றும் பெற்றோரின் அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு, இறுதியாக தாயிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.
குழந்தையைக் கண்டுபிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த ஆடவருக்கும் அன்பழகன் நன்றித் தெரிவித்துக் கொண்டார்.
ஊதா நிற சட்டையுடன் இருக்கும் குழந்தையை கையில் தூக்கி வைத்துகொண்டு, அது ஸ்ரீ கெம்பாங்கானில் காணாமல் போனதாக நம்பப்படும் குழந்தையென, ஓர் ஆடவர் தகவல் கூறிய வீடியோ டிக் டோக்கில் வைரலானது