
செர்டாங், மார்ச்-7 – சிலாங்கூர், ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள கேளிக்கை மையமொன்றில் நடத்தப்பட்ட சோதனையில் 80 கள்ளக் குடியேறிகள் கைதாகியுள்ளனர்.
அவர்களில் 75 பேர் பெண்களாவர்.
புதன்கிழமை இரவு அச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக, சிலாங்கூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் கைருடின் அமினுஸ் கமாருடின் தெரிவித்தார்.
17 முதல் 45 வயது வரையிலான அவர்கள் அனைவரும் வங்காளதேசம், லாவோஸ், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
அவர்கள் அங்கு நிகழ்ச்சிப் படைப்பாளர்களாவும், வருபவர்களை ‘கவனிப்பவர்களாவும்’ வேலை செய்கின்றனர்.
ஆனால், குடிநுழைவு அதிகாரிகள் விசாரித்த போது, சிலர் தங்களை வாடிக்கையாளர்களாகக் காட்டிக் கொள்ள முனைந்த வேளை, பெண்களில் பலர், உள்ளூர் ஆடவர்களின் காதலிகள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர்.
எனினும், அவர்களின் தந்திரம் குடிநுழைவு அதிகாரிகளிடம் பலிக்கவில்லை.
குடிநுழைவுச் சட்ட மீறலுக்காக கைதான 80 பேரும், மேல் விசாரணைக்காக செமஞே தடுப்பு முகாமுக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.
பொது மக்கள் கொடுத்த புகாரை அடுத்து 2 வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட உளவு நடவடிக்கைகள் வாயிலாக இந்த Op Gegar சோதனை நடத்தப்பட்டது.