
கோலாலாம்பூர், மார்ச்-17-நோன்புப் பெருநாளை ஒட்டி டோல் கட்டணங்களுக்கு 50 விழுக்காடுக் கட்டணக் கழிவுச் சலுகையை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு 12.01 மணி தொடக்கம், மார்ச் 19 இரவு 11.59 மணி வரை இச்சலுகை வழங்கப்படுகிறது.
BSI டோல் சாவடி, தஞ்சோங் குப்பாங் டோல் சாவடி, LINKEDUA இரண்டாவது பாலம் தவிர்த்து, மற்ற அனைத்து நெடுஞ்சாலைகளிலும் பயணிக்கும் முதல் வகுப்பு தனியார் வாகனங்கள் இந்த கட்டணக் கழிவை அனுபவிக்கலாம்.
பெருநாள் கொண்டாட சொந்த ஊர்களுக்குத் திரும்பும் மக்களின் பயணச் செலவுகளை இது குறைக்க உதவும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிக்கையொன்றில் கூறினார்.
இந்த கட்டணக் கழிவைச் சமாளிக்க, அரசாங்கம் நெடுஞ்சாலைப் பராமரிப்பு நிறுவனங்களுக்கு 21.03 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டைத் தருமென்றும் அவர் சொன்னார்.
இவ்வேளையில், Balik Kampung நாட்களில் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் நோக்கில், இந்த டோல் கட்டண தள்ளுபடி நாட்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப் பணி அமைச்சு விளக்கியது.
அதே நேரத்தில், நெடுஞ்சாலைகளில் அனைத்து பராமரிப்பு பணிகளையும் மார்ச் 18 முதல் 30 வரை நிறுத்துமாறும் அது உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம், போக்குவரத்து சீராக நடைபெற, பாதைகள் மூடப்படாமல், Aidilfitriக்கு பிறகு ஊருக்குப் போகும் மற்றும் தலைநகரத்துக்கு திரும்பும் பயணிகள் குறைந்த இடையூறுடன் பயணிக்க முடியும் என அமைச்சு கூறிற்று.



