
கோலாலம்பூர், ஜனவரி-16-ஹலால் சான்றிதழ் குறித்த ஒரு போலி செய்தி கட்டுரை தொடர்பில், DAP-யின் செப்பூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரேசா கோக், போலீஸ் புகார் செய்துள்ளார்.
‘பன்றிகளுக்கும் ஹலால் சான்றிதழ் வழங்கலாம்’ என தெரேசா கூறியதாக அக்கட்டுரை குறிப்பிட்டுள்ளது.
எனினும், அது முழுக்க முழுக்க பொய் என்றும், தாம் ஒருபோதும் அதுபோன்ற கருத்தை வெளியிடவில்லை என்றும், போலீஸ் புகாரில் தெரேசா தெரிவித்தார்.
இணையத்தில் உள்ளூர் ஊடக தலைப்புகளைப் போல மாற்றி அமைக்கப்பட்ட அப்போலி பதிவு, மக்களைத் தவறாக வழிநடத்தி, மத உணர்வுகளைத் தூண்டக்கூடும் எனவும் அவர் எச்சரித்தார்.
இத்தகவலை உருவாக்கி வைரலாக்கியவர்களைக் கண்டறிய போலீஸ் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரேசா வலியுறுத்தினார்.
மதம் மற்றும் அரசியல் தொடர்பான செய்திகளை பகிருவதற்கு முன் மக்கள் உண்மையை சரிபார்க்க வேண்டும் எனவும் அவர் நினைவூட்டினார்.
இவ்வேளையில் விசாரணைத் தொடங்கியுள்ளதை போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.



