
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-28 – இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹானா இயோவுக்கு இழப்பீடு மற்றும் செலவுகளாக 480,000 ரிங்கிட்டை செலுத்த வேண்டும் என்ற தீர்ப்பை நிறைவேற்றுவதைத் தடுக்க, வட மலேசியப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கமாருல் சமான் யூசோஃப் (Kamarul Zaman Yusoff) தாக்கல் செய்த மனுவை கோலாலாம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தடை விதிக்க எந்த சிறப்பு சூழ்நிலைகளும் இல்லை என நீதிமன்ற ஆணையர் அவிந்தர் சிங் கில் இன்று தீர்ப்பளித்தார்.
2,500 ரிங்கிட் செலவுத் தொகையுடன் அவ்விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது.
2017-ல் வெளியிடப்பட்ட 2 ஃபேஸ்புக் பதிவுகளில் ஹானா இயோவை அவதூறாகப் பேசியதற்காக, அவருக்கு 400,000 ரிங்கிட் இழப்பீடு மற்றும் 80,000 ரிங்கிட் சட்டச் செலவுகளைச் செலுத்துமாறு, கடந்த மே 30-ஆம் தேதி உயர் நீதிமன்றம் கமாருலுக்கு உத்தரவிட்டது.
கமாருல் ஜூன் மாதம் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தாலும், தடை கோருவதில் தாமதம் செய்தார்.
ஹானா இயோவின் சார்பாக பலமுறை கோரிக்கைகள் வைக்கப்பட்ட போதிலும், கமாருல் பணம் செலுத்தத் தவறியதால், அந்த செகாம்புட் எம்.பி. திவால் நடவடிக்கைகளைத் தொடங்கினார்.