
கோலாலம்பூர், ஏப்ரல்-23, கோலாலம்பூர் மாநகர மன்றம் DBKL-லுக்குச் சொந்தமான மற்றொரு நிலத்தின் உரிமை குறித்து கேள்வி எழுந்துள்ளது.
ஜாலான் ச்செராஸுக்கு வெளியே 129,100 சதுர மீட்டர் நிலப்பரப்பை உட்படுத்திய அப்பகுதி, கிளினிக்கோடு, கூட்டங்கள், மாநாடுகள், பயிற்சி பட்டறைகள் போன்றவை நடைபெறும் இடமாக விளங்கி வந்தது.
1 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள அந்நிலத்தில், சிறு – அங்காடி வியாபாரிகள் மற்றும் உணவுகளைக் கையாள்பவர்களுக்குத் தடுப்பூசி மையமாகவும் அந்த கிளினிக் விளங்கி வந்தது.
ஆனால், 2003-ஆம் ஆண்டோடு அந்த இடம் நிரந்தர மூடு விழா கண்டதோடு, அதற்கான காரணமோ தெரிவிக்கப்படவில்லை.
மக்களுக்குச் சேவையை வழங்கிய வந்த அந்த கிளினிக்கை DBKL மூடியது ஏன் என, மூத்த பத்திரிகையாளர் ஆர். நடேஸ்வரன், மலேசியா கினிக்கு அனுப்பியக் கடித்ததில் கேள்வி எழுப்பியுள்ளார்.
கேள்விக்கு பதில் தேடி நில அலுவலகத்தை நாடினால், ஒரு திடுக்கிடும் விஷயம் அம்பலமானது; அதாவது Perano Developemnt Sdn Bhd எனும் நிறுவனம் 2013-ஆம் ஆண்டே அங்கு கேவியட் மனு அல்லது முன்னெச்சரிக்கை மனுவை வைத்துள்ளது.
ஆனால், கூட்டரசு பிரதேச நில மன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அந்நிலத்தை விற்கவோ, குத்தகைக்கு விடவோ அல்லது அடமானம் வைக்கவோ முடியாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த Perano, ஜவுளி மாளிகையான Jakel Trading-ங்கின் கீழுள்ள 26 துணை நிறுவனங்களில் ஒன்றாகும்.
முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கிடமிருந்து பெற்றதாகக் கூறப்படும் 194 மில்லியன் ரிங்கிட்டை மீட்டெடுப்பதற்காக 2018-ஆம் ஆண்டில் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்ட பல நிறுவனங்களில் இந்த நிறுவனமும் அடங்கும்.
நிலைமை இப்படியிருக்க அந்நிலத்தில் Perano நிறுவனம் ‘பட்டா’ விரித்தது ஏன்? அப்படியானால் நிலத்தை அது வாங்கி விட்டதா? அப்படி வாங்கியிருந்தால் 2013-ஆம் ஆண்டிலேயே அது ஏன் குறிப்பிடப்படவில்லை என நடேஷ்வரன் சரமாரியாகக் கேள்விகளை எழுப்புகிறார்.
அந்நிலம் சட்டப்படி DBKL-லுக்குச் சொந்தமான பட்சத்தில், 10 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த கிளினிக்கை அவசர அவசரமாக அது மூடியது ஏன்?
நிலத்தின் மீதான கட்டுப்பாடுகள் குறித்து DBKL அறிந்திருக்கவில்லையா? நிலத்தை வணிக ரீதியாகவோ அல்லது வீட்டுவசதியாகவோ மறுபெயரிடுவது ஒருபுறம் இருக்க, அதை விற்க ஒப்புதல் பெற்றதா? என்ற கேள்விகளுக்கும் விடையில்லை என்கிறார் நடேஸ்வரன்.
“நில ஒப்பந்தங்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று நான் பலமுறை கோரிக்கை விடுத்திருந்தேன், ஆனால் அவை செவிடர் காதுகளில் விழுந்துவிட்டன” என அவர் ஏமாற்றம் தெரிவித்தார்.
இதில் DBKL மௌனம் காக்க முடியாது; அதே சமயம் நாடாளுமன்ற பொது கணக்குத் தணிக்கைக் குழு PAC-யும் விசாரணையில் இறங்க வேண்டும்.
விசாரணை நடத்தி, கைவிட்டு போன பில்லியன் கணக்கான வருவாயை மீட்டெடுத்து சமூகத்தின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்த வேண்டும்.
இப்போது ஆட்சியில் இருப்பவர்கள், 2022 பொதுத் தேர்தலுக்கு முன்பு இதைத்தானே நமக்கு வாக்குறுதியாக அளித்தார்கள் என நடேஸ்வரன் சொன்னார்