
கோலாலம்பூர், ஜூன்-23 – 100 வயதாகும் முன்னாள் பிரதமர் துன் Dr மகாதீர் மொஹமட், புரோட்டோன் நிறுவனத்தின் முதல் மின்சாரக் காரான e.MAS 7 -வை சொந்தமாக ஓட்டிப் பார்த்த வீடியோ வைரலாகியுள்ளது.
மகாதீரின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட அவ்வீடியோவில், தலைநகர் சாலைகளில் அவர் அந்த EV காரை ஓட்டிச் செல்வதைக் காண முடிகிறது.
e.MAS 7 EV கார் அதிநவீன வடிவமைப்பைக் கொண்டுள்ளதோடு ஓட்டுவதற்கும் மிகவும் வசதியாக உள்ளதாக, அந்த பெருந்தலைவர் கூறினார்.
மகாதீர் காரோடும் வீடியோவைப் பார்த்த வலைத்தளவாசிகள் ஆச்சரியத்துடன் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
40 ஆண்டுகளுக்கு முன் புரோட்டோன் நிறுவனத்தைத் தொடக்கி, அதன் பல்வேறு பரிணாம வளர்ச்சியை நேரில் கண்டு, இன்று தனது 100-ஆவது வயதில் EV காரை சொந்தமாக ஓட்டும் அளவுக்கு, மகாதீர் கொடுத்து வைத்தவர் என அவர்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர்.
புரோட்டோன் e.MAS 7 கார் கடந்தாண்டு டிசம்பர் 16-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஐந்து மாதங்களில் 3,632 கார்கள் விற்கப்பட்டதன் வழி, EV கார்களிலேயே மிகவும் அதிகம் விற்கப்பட்ட கார் மாடலாக இந்த e.MAS 7 திகழ்வது குறிப்பிடத்தக்கது.