
பெய்ஜிங், ஏப்ரல்-9, சீனாவில் உயிருள்ள 100 டன் முதலைகளை 550,000 அமெரிக்க டாலர்களுக்கு ஒரு நீதின்றம் ஏலத்தில் விட்டுள்ளது.
முதலைகளை ஏலத்தில் விடுவது கேட்டிராத ஒன்று என்பதால், இவ்வறிவிப்பு வெளியான கையோடு வலைத்தளங்களில் பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
அந்த ஊர்வன விலங்குள் 2005-ஆம் ஆண்டு Mo Junrong என்பவரால் நிறுவப்பட்ட Guangdong Hongyi முதலை தொழில்துறை நிறுவனத்துக்குச் சொந்தமானவையாகும்.
Mo சீனாவின் “முதலைகளின் கடவுள்” என அழைக்கப்பட்டவராவார்.
எனினும் ஒப்புக் கொண்ட நிதி கடப்பாட்டை தொடரத் தவறியதால் முதலைகள் பறிமுதல் செய்யப்பட்டு இப்போது ஏலத்தில் விடப்பட்டுள்ளன.
மார்ச் 9-ஆம் தொடங்கிய ஏலம் மே 9 வரை நீடிக்கும்.
இங்கு ஏலத்தில் உள்ளவை சயாமிய முதலைகள் ஆகும்; இவை 2003 முதல் வணிக ரீதியாக வளர்க்கப்பட்டு வர்த்தகம் செய்யக்கூடிய சீனாவின் காட்டு விலங்குகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஒரு சயாமிய முதலை பொதுவாக 200 முதல் 500 கிலோ கிராம் எடையுள்ளதாக இருக்கும்.
அவற்றை ஏலத்தில் எடுப்பவர்கள் நேரில் வந்து பெற்றுச் செல்ல வேண்டும்; அனுப்பும் சேவையெல்லாம் கிடையாது.
முதலைகளைப் பிடிப்பது, எடை போடுவது, ஏற்றுவது மற்றும் கொண்டு செல்வது உட்பட சேகரிப்புக்கான அனைத்து செலவுகளையும் ஏலத்தில் எடுப்பவர்களே ஏற்க வேண்டும்.
அதை விட முக்கியமாக, முதலை வகையின் கீழ் நீர்வாழ் வனவிலங்குகளுக்கான செயற்கை இனப்பெருக்க உரிமத்தை அவர்கள் வைத்திருக்க வேண்டும்; இவ்வளவு பெரிய விலங்கைக் கையாள தேவையான வசதிகள் மற்றும் போக்குவரத்து திறன்களைக் கொண்டிருக்க வேண்டும்.
வாங்கிய பிறகு மேற்கண்ட தேவைகளில் ஏதேனும் ஒன்றைப் பூர்த்திச் செய்யத் தவறினால், அபராதமாக 41,000 டாலர் முன்பணத்தை நீதிமன்றம் பிடித்தம் செய்துகொள்ளும்.
இதுவரை, 4,000-க்கும் மேற்பட்டோர் ஏலப் பக்கத்தைப் பார்த்துள்ளனர்; ஆனால் யாரும் இணைய ஏலத்தில் பங்கேற்க பதிவுச் செய்யவில்லை என்பது சோகமாகும்.