
பத்து பெரண்டாம், ஜூலை-13- மலாக்கா, பத்து பெரண்டாமில் 120 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது ஸ்ரீ சுப்ரமணியர் தேவஸ்தானம்.
பத்து பெரண்டாம் நதிக்கரை ஓரத்தில் அழகுற அமைந்துள்ள இந்த முருகன் திருத்தலம், மலாக்கா – தம்பின் இரயில் பாதையை அடுத்துள்ள அரசாங்க தரிசு நிலத்தில் 100 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டதாகும்.
பிறகு படிப்படியாக முன்னேற்றம் கண்டு ஆலயம் வளர்ந்து 1966-ஆம் ஆண்டு அது முதல் கும்பாபிஷேகம் கண்டது.
இந்நிலையில் மனோகரன் தலைமையிலான தேவஸ்தானத்தின் முயற்சியில் ஆலயம் மறுசீரமைக்கப்பட்டு, திருப்பணிகள் முடிந்து இன்று அக்கோயில் தனது ஐந்தாவது மகா கும்பாபிஷேகத்தை விமரிசையாக நடத்தியுள்ளது.
சுய பிரகாச சிவாகம ஞான பானு சிவ ஸ்ரீ PD சண்முகம் குருக்கள் தலைமையில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் சுற்றுவட்டார மக்கள் திரளாக பங்கேற்று திருமுருகப் பெருமானின் அருளைப் பெற்றனர்.
ஒரு சிறிய ஆலயமாகத் தோன்றி இன்று பெரிய தேவஸ்தானமாக வளர்ந்து நிற்கும் இந்த ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயம், மலாக்காவில் தைப்பூசத்திற்கு பெயர் பெற்றதாகும்.
ஆண்டுதோறும் 5,000 முருக பக்தர்கள் ஒன்று கூடி இங்குத் தைப்பூசத் திருவிழாவை சிறப்பிப்பர்.
இது தவிர்த்து, இந்து சமய சொற்பொழிவுகள், பஜனைக் கூட்டங்கள் போன்ற நடவடிக்கைகளும் இங்குத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.