Latestமலேசியா

12வது மலேசியத் திட்டத்தின் கீழ் 1,720 திவேட் திட்டங்களில் 96 சதவீதம் ‘பயனுள்ள திட்டங்கள்’ அந்தஸ்தை எட்டியுள்ளன – அமைச்சர் ரமணன்

12வது மலேசியத் திட்டத்தின் கீழ் 1,720 திவேட் திட்டங்களில் 96 சதவீதம் ‘பயனுள்ள திட்டங்கள்’ அந்தஸ்தை எட்டியுள்ளன – அமைச்சர் ரமணன்

கோலாலம்பூர், பிப்ரவரி 12,

12-வது மலேசியத் திட்டத்தின் கீழ், 2023 முதல் 2025 வரை மதிப்பீடு செய்யப்பட்ட 597 தொழில்நுட்ப, தொழிற்கல்வி பயிற்சி (திவேட்) நிறுவனங்களில் உள்ள 1,720 திட்டங்களில், 96 சதவீதம் “பயனுள்ள திட்டங்கள்” எனும் அந்தஸ்தைப் பெற்றுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட 70 சதவீத தேசிய இலக்கை விட இந்தச் சாதனை மிக அதிகம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“மடானி அரசாங்கம் செயல்படுத்தி வரும் திவேட் மேம்பாட்டு நடவடிக்கைகள் உண்மையான பலனைத் தருகின்றன என்பதற்கு இதுவே சான்று. இது நமது பட்டதாரிகளை நிலையான, அதிக வருமானம் ஈட்டக்கூடிய தொழில் பாதையில் அமர்த்துவதை உறுதி செய்கிறது,” என்று திறன் மேம்பாட்டுத் துறை (JPK) ஏற்பாடு செய்திருந்த ‘5-நட்சத்திர TVET நிறுவன விருது’ வழங்கும் விழாவில் ஆற்றிய உரையில் அவர் குறிப்பிட்டார்.

இந்த விழாவில் திறன் மேம்பாட்டுத் துறை தலைமை இயக்குநர் டாக்டர் கமாருசமான் பின் முகமட் அலி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் ரமணன் மேலும் கூறுகையில், இந்தச் சாதனை சதவீதமானது தற்போது ‘செயல்திறன் அடிப்படையிலான நிதி’ (Performance-Based Funding – PBF) ஒதுக்கீட்டிற்கு அடிப்படை ஆதாரமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம், சிறந்த முறையில் செயல்படும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் வேளையில், பின்தங்கியுள்ள நிறுவனங்கள் தங்களின் ஆற்றலை மேம்படுத்திக் கொள்ள உதவிகள் வழங்கப்படும் என்றார்.

இதேவேளை, 5-நட்சத்திர விருது பெற்ற அனைத்து நிறுவனங்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், நாட்டின் எதிர்காலம் தற்போது உருவாக்கப்படும் தரமான மனித வளத்தையே நம்பியிருப்பதால், இந்த நிறுவனங்கள் தங்களின் புத்தாக்கத் திறனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.

முன்னதாக, டாக்டர் கமாருசமான் தனது உரையில், பல்வேறு பயிற்சித் துறைகளைச் சேர்ந்த 62 திவேட் நிறுவனங்களில் உள்ள மொத்தம் 155 திட்டங்கள் மிக உயர்ந்த ‘5-நட்சத்திர’ அந்தஸ்தைப் பெற்றுள்ளதாகப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இந்த விழாவில், ‘மலேசியா திவேட் மதிப்பீடு’ (Malaysia TVET Rating) எனும் ஒருங்கிணைந்த மதிப்பீட்டு முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ‘ஜேபிகே புரட்சி 2026-2030’ திட்டத்தின் கீழ், மலேசியாவின் திவேட் தரத்தை உலகளாவிய நிலைக்குக் கொண்டு செல்வதற்கான முதல் பாய்ச்சலாகக் கருதப்படுகிறது.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய கமாருசமான், தொழில்துறையில் அதிக தேவையைக் கொண்டுள்ள ஆட்டோமோட்டிவ், மின்சாரத் துறை சார்ந்த படிப்புகள், ‘பயனுள்ள திட்டங்கள்’ அந்தஸ்தைப் பெற்ற முக்கிய பாடப்பிரிவுகள் என்றும், இவை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை முழுமையாக உறுதி செய்கின்றன என்றும் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!