
கோலாலம்பூர், ஆகஸ்ட்-13- மேம்பட்ட கல்வி, விரிவான பொருளாதார வாய்ப்புகள், மலிவான வீடுகள், அனைவரது பங்களிப்பும் உள்ள சமூக வளர்ச்சி என ஏராளமான வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ள 13-ஆவது மலேசியத் திட்டத்தில் இந்தியர் மேம்பாட்டுக்கான தெளிவான எண்கள், இலக்குகள் மற்றும் செயலாக்கத் திட்டம் இல்லாமல் இருப்பதாக ம.இ.கா கூறியுள்ளது.
13-ஆவது மலேசியத் திட்டத்தில் கடந்த காலத்தில் வரையப்பட்ட Indian Blueprint-டில் உள்ள அம்சங்கள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் Indian Blueprint-டில் இந்தியர் மேம்பாட்டுக்கான தெளிவான திட்டங்களும் அதன் ஒவ்வொரு கூறுக்கும் என்ன இலக்கு எவ்வளவு காலகட்டம் என தெளிவான விபரங்களும் இடம்பெற்றிருந்தன.
அது போல் 13-ஆவது மலேசியத் திட்டத்திலும் இடம் பெறுவது அவசியம்.
அப்படி தெளிவான இலக்கு இல்லாத வாக்குறுதிகள் அரசாங்க ஆவணங்களில் மட்டுமே இடம்பெற்றிருக்கும் பட்சத்தில், சமூகத்தில் எந்தவித உண்மையான மாற்றத்தையும் உருவாக்காமல் போகும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது என ம.இ.கா நினைவூட்டிள்ளது.
இந்தியச் சமூகம் இனியும் தெளிவற்ற வளர்ச்சி பேச்சுகளுடன் வாழ முடியாது. “கவனிக்கப்படும்” அல்லது “பரிசீலிக்கப்படும்” என்ற வார்த்தைகளை நாம் ஏற்கனவே பலமுறை கேட்டு பழகிவிட்டோம்.
எந்த அமைச்சு பொறுப்பேற்கிறது, எந்த அமைப்பு அதை நடைமுறைப்படுத்தும், அல்லது விவரங்களை பெற யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்பது மக்களுக்குத் தெரியாத பட்சத்தில், 13-ஆவது மலேசியத் திட்டத்தில் வாய்ப்புகளையும் வாக்குறுதிகளையும் மட்டும் வீசுவதால் பயனேதும் ஏற்படப் போவதில்லை.எனவே, திட்டங்களுக்கான விரிவான விவரங்களை அரசாங்கம் வழங்க வேண்டும்.
உதாரணத்திற்கு, தமிழ் பள்ளிகள் “மேம்படுத்தப்படும்” அல்லது “புதிதாக கட்டப்படும்” என்று மட்டும் ‘பொதுவாகாச்’ சொல்லாமல் மூலதனச் செலவிற்கான தொகை எவ்வளவு, செயல்பாட்டு செலவிற்கான தொகை எவ்வளவு, எத்தனை பள்ளிகள் இதில் அடங்கும், கட்டுமானம் எப்போது முடியும், எந்த நிறுவனம் அல்லது சிறப்பு பிரிவு இதைச் செயல்படுத்தும் என்பதையும் கூற வேண்டும்.
அதுபோல் 2026–2035 இடையில் கட்டப்படவிருக்கும் 1 மில்லியன் வீடுகளில், எத்தனை வீடுகள் இந்தியச் சமூகத்திற்காக ஒதுக்கப்படும்? தகுதி அளவுகோல்கள் என்ன? தேர்வு செயல்முறை பாகுபாடின்றி நடைபெறும் என உறுதி செய்யப்படுகிறதா? என்ற விவரங்களும் வேண்டும்.
அதேபோல்தான் மைக்ரோ மற்றும் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு தனி நிதி ஒதுக்கீடு விபரங்களும்.
13-ஆவது மலேசியத் திட்டம் ஒரு பொருளாதார ஆவணம் மட்டுமல்ல; இது அரசாங்கம் மற்றும் மக்களுக்கு இடையிலான ஒரு நெறி ஒப்பந்தம்.
மக்கள் கேட்பது எல்லாம். வாக்குறுதிகள் அளவிடக்கூடிய செயல்களாக மாற வேண்டும் என்பதே என ம.இ.கா மத்திய செயற்குழு உறுப்பினர் சிவ சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக தெரிவித்தார்.