
கோலாலம்பூர், ஆகஸ்ட்-5 – ஒரு வாரமாக அமைதியாய் நடைபெற்று வந்த மக்களவைக் கூட்டத்தில் நேற்று ‘மே 13’ இனக்கலவரம் குறித்த பேச்சு எழுந்ததால் பெரும் அமளி ஏற்பட்டது.
பெரிக்காத்தான் நேஷனலைச் சேர்ந்த பெண்டாங் நாடாளுமன்ற உறுப்பினர் Awang Hashim, அந்த சர்ச்சையைத் தொடக்கி வைத்தார்.
13-ஆவது மலேசியத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசியவர், அதில் பூமிபுத்ராக்களின் மேம்பாட்டுக்கான இலக்கிடப்பட்டத் திட்டங்கள் எதுவும் இல்லையெனக் குறைக் கூறினார்.
“சீனர்களின் கம்போங் பாரு புது கிராமங்களின் மறுசீரமைப்புக்கென தனியாக திட்டம் அறிவிக்கப்பட்டதை நாங்கள் பிரச்னையாக்கவில்லை; ஆனால், பூமிபுத்ராக்களுக்கு ஏன் தனித் திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை?” என அவர் கேட்டார்.
இதுவோர் அப்பட்டமான புறக்கணிப்பு என சாடிய Awang Hashim, பூமிபுத்ராக்களுக்கு எதிரான இது போன்ற பொருளாதார அழுத்தங்களால் தான் மே 13 இனக்கலவரம் வெடித்ததாகக் குறிப்பிட்டார்.
இதனால் கொதித்தெழுந்த ஜெலுத்தோங் உறுப்பினர் RSN ராயர், Awang Hashim தன் கருத்தை மீட்டுக் கொள்ளுமாறு துணை சபாநாயகர் உத்தரவிட வேண்டுமென வலியுறுத்தினார்.
இன மோதலை தூண்டிவிடும் வகையில் பேசுவதாக ராயர் முன்வைத்த குற்றச்சாட்டை மறுத்த Awang Hashim, தனது கூற்றை மீட்டுக் கொள்ள முடியாது என்றார்.
இதனால் இரு பக்கமும் கூச்சல் குழப்பம் நிலவியது.
கடைசியில் துணை சபாநாயகர் தலையிட்டு இரு பிரிவினரையும் நிதானம் காக்கச் சொல்லியதோடு, Awang Hashim-மின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதிலளிப்பார் எனக் கூறினார். ராயர் திருப்தி கொள்ளாதலால் அவர் ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்யலாம் என்றார்.