
உலு சிலாங்கூர், மார்ச்-1-139-ஆம் ஆண்டு பங்குனி அமாவாசை தீமிதி திருவிழாவை முன்னிட்டு, சிலாங்கூர், உலு பெர்ணாம், Changkat Asa தோட்டத்தில் உள்ள ஸ்ரீ மஹா நோக்காளம்மன் ஆலயத்தில் குலதெய்வ வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில், நேற்று சுமார் 600 பக்தர்கள் சீர்வரிசை கொண்டு வந்து, பொங்கல் வைத்து வழிபட்டனர்.
காலையிலிருந்தே பூஜைகள் பாலபிஷேகம், மஞ்சள் அபிஷேகம் என களைக் கட்டியது.
மலேசியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலிருந்து பக்தர்கள் வந்து பொங்கல் வைத்ததாக, ஆலயத்தின் பிரதான குருக்குள் சிவ ஸ்ரீ ராமலிங்கம் வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.
உச்சக்கட்டமாக மார்ச் 18-ஆம் தேதி பங்குனி அமாவாசை தீமிதி திருவிழா நடைபெறுகிறது.
அதில் மக்கள் திரளாகக் கலந்து கொண்டு நோக்காளம்மனின் அருளைப் பெற்றுச் செல்லுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
தென்னிந்திய மாநிலம் ஆந்திராவின் அனகப்பள்ளியில் உள்ளது போலவே, ஆலய வழிபாடுகள் நடைபெறுவது மலேசியாவில் இங்கு மட்டுமே என்பது, இந்த கோவிலின் தனிச்சிறப்பாகும்.
அதனை நேரில் வந்து தரிசித்து நோக்காளம்மனின் அருளைப் பெறுவது பெரும் பாக்கியமென, பக்தர்களும் பொது மக்களும் தங்களின் அனுபவத்தைப் பகிர்ந்தனர்.
கிராம தேவதையாக அருள்பாலிக்கும் நோக்காளம்மனை வணங்குவதன் மூலம் நோய்கள் நீங்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும், குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை…



