
ஜெலெபு, மார்ச்-15 – அம்னோவைச் சேர்ந்த 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமை அரசாங்கத்துக்கான ஆதரவை மீட்டுக் கொள்ளப்போவதாகக் கூறப்படுவதை, அதன் உச்சமன்ற உறுப்பினர் ஒருவர் மறுத்துள்ளார்.
அது அம்னோவை சீண்டிப் பார்க்கும் நோக்கிலான ஒரு வதந்தியே என, நெகிரி செம்பிலான் அம்னோ தலைவரும் ஜெலெபு நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ ஜலாலுடின் அலியாஸ் கூறினார்.
அம்னோவின் அனைத்து எம்.பிக்களையும், 100 மில்லியன் ரிங்கிட் உத்தரவாதத் தொகை உட்பட தேர்தலுக்கு முன் போடப்பட்ட ஒப்பந்தம் கட்டுப்படுத்தும்.
அது தவிர, அரசியல் கூட்டணி மற்றும் பிரதமருக்கான ஆதரவு உள்ளிட்ட விவகாரங்களில் கட்சி எடுக்கும் முடிவுகளை எம்.பிக்கள் மீறுவதைத் தடுக்கும் வகையில், 2023-ஆம் ஆண்டே கட்சி விதிகள் திருத்தப்பட்டு விட்டன.
அரசியல் எதிரிகளுடன் உடன்பாடு வைத்துக் கொள்வதையும் சட்டத் திருத்தம் தடுப்பதாக, ஜலாலுடின் சொன்னார்.
அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சித் தாவல் குறித்து நீண்ட காலமாகவே வதந்திகள் நீடிப்பதால், அதனைப் பொருட்படுத்த வேண்டாமென்றார் அவர்.
ஒற்றுமை அரசாங்கக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள 30 தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களில் 26 பேர் அம்னோவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.