போர்ட் வில்லா, டிசம்பர்-20, சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் பேரழிவைச் சந்தித்துள்ள தென் பசிஃபிக் பெருங்கடல் நாடான வனுவாத்து (Vanuatu), அனைத்துலக உதவியைக் கோரியுள்ளது.
டிசம்பர் 17-ல் ரிக்டர் அளவைக் கருவியில் 7.3-ராக பதிவாகிய நில நடுக்கத்தில், அங்கு இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
கட்டிட இடிபாடுகளில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஆனால், அச்சிறியத் தீவு நாட்டில் ஏற்கனவே மருத்துவமனைகளில் உள்ள வசதிகள் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை.
நிதி வளம் மற்றும் தரமான மருத்துவ உபகரணங்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையால், நோயாளிகளைச் சமாளிக்க முடியாமல் அவை திணறுகின்றன.
இதனால், நாடு முழுவதுக்குமான சுகாதார பராமரிப்புச் சேவைகளுக்கு, பயன்படுத்தியப் உபகரணங்களின் மறுபயனீட்டையே மருத்துவமனைகள் நம்பியுள்ளன.
போதாக்குறைக்கு மருத்துவர்கள் மற்றும் தாதியர்களும் தேவையான அளவில் இல்லை.
இதையடுத்து, வேறு வழியின்றி அனைத்துலக நாடுகளின் உதவியை வனுவாத்து அரசாங்கம் கோரியுள்ளது.
இவ்வேளையில் நியூ சிலாந்திலிருந்து முதல் கட்ட மனிதநேய உதவிகள் வனுவாத்து தலைநகர் போர்ட் வில்லா சென்றடைந்தன.
சுத்தமான குடிநீர், மருந்து மாத்திரைகள், நடமாடும் மருத்துவக் குழுக்கள், தேடல்-மீட்புக் குழுக்கள், துப்புரவுப் பணிகளுக்கான கனரக இயந்திரங்கள் போன்றறை வனுவாத்து மக்களுக்கான அவசரத் தேவைகள் என ஐநாவும் அறிவித்துள்ளது.