குவாலா திரங்கானு, செப்டம்பர்-4 – ஆண் மாணவனிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக, இடைநிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
குவாலா திரங்கானு செஷன்ஸ் நீதிமன்றத்தில் 47 வயது அவ்வாடவர் மீது 4 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.
கடந்தாண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்கும் 10-ஆம் தேதிக்கும் இடைபட்ட காலத்தில், டுங்குனில் உள்ள ஒரு வீட்டில் வைத்தும், காருக்குள்ளும் 15 வயது பையனிடம் அவர் தவறாக நடந்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும், அனைத்து 4 குற்றச்சாட்டுகளையும் மறுத்து அவ்வாசிரியர் விசாரணைக் கோரினார்.
இதையடுத்து, மொத்தமாக 60,000 ரிங்கிட் ஜாமீன் தொகையில் நீதிமன்றம் அவரை விடுவித்தது.
அக்டோபர் 6-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வரும் வரை, பாதிக்கப்பட்ட நபரையோ அரசு தரப்பின் சாட்சிகளையோ தொந்தரவு செய்யக் கூடாது என்ற கூடுதல் நிபந்தனையும் அந்நபருக்கு விதிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பிரம்படியும் விதிக்கப்படலாம்.