16 வயதுக்குட்பட்ட ஆஸ்திரேலியர்கள் முகநூல், இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கப்படுவர்

சிட்னி, நவ 20 – டிசம்பர் 4 ஆம் தேதி முதல் 16 வயதுக்கும் குறைந்த ஆஸ்திரேலியர்கள் முகநூல் ( Facebook ) மற்றும் இன்ஸ்டாகிராமில் ( Instagram) இருந்து நீக்கப்படுவார்கள் என்று தொழிற்நுட்ப நிறுவனமான மெட்டா நேற்று தெரிவித்துள்ளது. இத்தகைய தரப்பினர் சமூக ஊடகத் தளங்களை அணுகுவதைத் தடைசெய்யும் புதிய ஆஸ்திரேலிய சட்டத்திற்கான தயாரிப்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 10 ஆம் தேதி முதல் இந்தச் சட்டம் அமலுக்கு வருவதால் , பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் போன்ற தளங்கள் 16 வயதுக்கு குறைந்த பயனர்களின் கணக்குகளை நீக்க வேண்டும்.
விதிகளைப் பின்பற்றத் தவறும் தளங்களுக்கு எதிராக கடுமையான அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தடை அமலுக்கு வரும் தேதிக்கு முன்னதாகவே பதின்ம வயதுடைய பயனர்களை நீக்கத் தொடங்குவதாக மெட்டா தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையில் ஆஸ்திரேலியாவில் 13 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு சொந்தமான சுமார் 350,000 இன்ஸ்டாகிராம் பயனர்களும் சுமார் 150,000 பேஸ்புக் பயனர்களும் பாதிக்கப்படுவர்.



