
கோலாலம்பூர், டிசம்பர்-9 – 16 வயதுக்குக் குறைவானவர்கள் கணக்கு திறப்பதைத் தடுக்கத் தவறும் சமூக ஊடக சேவை வழங்குநர்களுக்கு, RM100 மில்லியன் அபராதம் விதிக்க வேண்டும் என, செனட்டர் S. வேள்பாரி பரிந்துரைத்துள்ளார்.
அபராதங்கள் கடுமையானால் தான் அமுலாக்கம் ஆக்ககரமான பலனைத் தருமென்றார் அவர்.
ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே இதுபோன்ற சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது; அங்கு 50 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
எனவே, மலேசியாவும் உயரிய அபராதத் தொகையை விதிக்க முன்வர வேண்டும்.
கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் சமூக ஊடகங்களுக்கு சமூகப் பொறுப்பைக் கற்றுக் கொடுக்க இதுவே சிறந்த வழியாகும் என்றார் அவர்.
2026 முதல் 16 வயதுக்கு குறைவானவர்களுக்கு சமூக ஊடக கணக்குகள் தடைச் செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், வேள்பாரி அவ்வாறு கூறினார்.
அடையாள அட்டை, கடப்பிதழ் போன்ற ஆவணங்கள் மூலம் வயது சரிபார்ப்பு நடைமுறைப்படுத்தப்படும் என தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் கூறியுள்ளார்.
குழந்தைகளை இணைய ஆபத்துகளிலிருந்து காப்பாற்றும் நோக்கில், இப்புதியச் சட்டம் ஆசியாவில் முன்னோடி நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.



