
கோலாலம்பூர், டிசம்பர்-7 – 16-ஆவது பொதுத் தேர்தலில் DAP-யுடன் எந்தவோர் ஒத்துழைப்பும் கிடையாது என, மலேசிய சீனர் சங்கமான ம.சீ.ச அதிரடி தீர்மானம் நீறைவேற்றியுள்ளது.
தேசிய முன்னணியின் இரண்டாவது பெரிய உறுப்புக் கட்சியான ம.சீ.ச , DAP-யுடன் தங்களுக்கு முக்கியமான கொள்கை வேறுபாடுகள் இருப்பதால், அதனுடன் இணைந்து செயல்பட முடியாது என, கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ Dr வீ கா சியோங் கூறினார்.
DAP-யும் பக்காத்தான் ஹராப்பானும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து முன்னுக்குப் பின் முரணாக கொள்கைகளை அறிவிப்பதும் மாற்றிக் கொள்வதுமாக உள்ளன.
எனவே, ஒருவேளை, தேசிய முன்னணியின் எந்தவோர் உறுப்புக் கட்சியாவது அடுத்தப் பொதுத் தேர்தலில் DAP-யுடன் எந்த வகையிலாவது ஒத்துழைக்குமாயின், அது BN ஆன்மா இறந்துவிட்டது என்பதற்கான சான்று என்றார் அவர்.
கோலாலம்பூரில் நேற்று நடைபெற்ற ம.சீ.ச பொதுப் பேரவையில் தீர்மானங்களை தாக்கல் செய்து பேசிய போது அவர் அவ்வாறு சொன்னார்.
முன்னதாக கொள்கையுரையாற்றிய கா சியோங், DAP-யுடன் அம்னோ தொடர்ந்து ஒத்துழைத்தால், ம.சீ.ச மௌனம் காக்காது; மாறாக தேசிய முன்னணியில் தனது நிலையை மறுபரிசீலனை செய்யுமென கூறியிருந்தார்.
அதற்காக பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் சேர்ந்து விடுவோம் என்றும் அர்த்தமில்லை; காரணம் அங்கு PAS கட்சி உள்ளது; அதனை சீன சமூகத்தினர் ஏற்றுக் கொள்வது கடினம் என்றார் அவர்.
DAP மற்றும் பக்காத்தான் ஹராப்பானுடன் 16-ஆவது பொதுத் தேர்தலிலும் கூட்டணி தொடருமென, BN தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி தொடர்ந்து கூறி வரும் நிலையில், ம.சீ.ச பொதுப் பேரவை இத்தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் ம.சீ.ச அதன் வரலாற்றிலேயே ஆகக் குறைந்த இடங்களாக வெறும் இரண்டே நாடாளுமன்றத் தொகுதிகளை வெற்றிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
வேண்டாத விருந்தாளியாக நடத்தப்படுவதால் ஏற்கனவே தேசிய முன்னணியிலிருந்து வெளியேறும் நிலைக்கு மற்றோர் உறுப்புக் கட்சியான ம.இ.கா சென்றுகொண்டிருக்கும் நிலையில், தற்போது ம.சீ.சவும் அதிரடி முடிவுக்குத் தயாராகி வருகிறது.



