
கோலாலம்பூர், பிப் 27 – 19 மாத குந்தை Hud Aryan Mohd Nor Hafifi மரணம் அடைந்ததைத் தொடர்ந்து கவனக் குறைவு தொடர்பாக அக்குழந்தையின் பெற்றோரிடம் போலீசார் விசாரணையை மேற்கொள்ளவிருக்கின்றனர்.
அந்த குழந்தையின் உடலில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூறு பரிசோதனையில் காயம் மற்றும் குற்ற அம்சங்கள் எதுவும் இல்லை. எனினும் மேல் விசாரணையை மேற்கெள்ளும்படி தானா மேரா போலீஸ் தலைவரை தாம் கேட்டுக்கொண்டிருப்பதாக கிளந்தான் போலீஸ் தலைவர் முகமட் யூசோப் மாமாட் (Mohd Yusoff Mamat) தெரிவித்தார்.
19 மாத குழந்தை ஒரு சில நிமிடங்களில் ஆற்றை அடைய முடியும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என டிக்டோக்கில் வைரலானதை அடிப்படையாகக் கொண்டு அந்த குழந்தையின் பெற்றோரிடம் போலீசார் இன்று வாக்குமூலம் பதிவு செய்வார்கள்.
அக்குழந்தையின் மரணத்திற்கு அலட்சியம் அல்லது கவனக்குறைவு காரணமாக இருக்கலாம் என நாங்கள் கவலைப்படுகிறோம் என முகமட் யூசோப் கூறினார்.
இப்போதைக்கு அக்குழந்தை திடீர் மரணம் அடைந்ததாக வகைப்படுத்தப்பட்டிருப்பதால் விசாரணை அறிக்கை எதுவும் திறக்கப்படவில்லை .
நேற்று மாலை மணி 4.15 அளவில் கம்போங் கெரிலா ஆற்றங்கரையில் உள்ள மரத்தில் சிக்கிய நிலையில் Hud Aryan உடல் மீட்கப்பட்டதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.
ஹுட் ஆர்யனின் உடல் அவனது பாட்டி வசிக்கும் இடத்திலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் அவன் காணாமல் போனதாகக் கூறப்பட்ட 45 மணி நேரத்திற்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது.