
லாஸ் ஏஞ்சலஸ், மார்ச்-16 – அமெரிக்கா, கலிஃபோர்னியாவில் ஸ்டார்பக்ஸ் drive-through மையத்தில் சூடான டீ தன் மடியில் கொட்டியதில் தீப்புண் காயங்களுக்கு ஆளானவர், அந்நிறுவனத்திற்கு எதிரான 50 மில்லியன் டாலர் இழப்பீட்டு வழக்கில் வெற்றிப் பெற்றுள்ளார்.
2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், ஸ்டார்பக்ஸில் ஆர்டர் செய்யப்பட்ட சூடான காப்பி சரியாக மூடப்படாததால், உணவு அனுப்பும் தொழில் செய்யும் அந்த ஓட்டுநர் மீது அது சிந்தியது.
இதனால் Michael Garcia-வுக்குத் தொடையில் மூன்றாம் நிலை தீக்காயங்கள் ஏற்பட்டு, நரம்புகளும் பாதிக்கப்பட்டன.
அக்காயத்தால் தனது கட்சிக்காரர் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக, Garcia-வின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடினார்.
அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, Garcia-வுக்கு ஏற்பட்ட உடல் வலி, மன வேதனை மற்றும் நீண்ட கால பிரச்னைகளுக்காக ஸ்டார்பக்ஸ் அந்த 50 மில்லியன் டாலர் இழப்பீட்டை வழங்க உத்தரவிட்டார்.
ஆனால் அத்தீர்ப்பை ஏற்க மறுத்த ஸ்டார்பக்ஸ் நிறுவனம், அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.