கோலாலம்பூர், செப்டம்பர் -17 – மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக், 1MDB நிதி முறைகேடு வழக்கு விசாரணைக்காக இன்று காலை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வந்தார்.
ஆனால், அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்து வந்தது அவரின் ஆதவாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
கையில் கைத்தடியும், சற்று பலவீனமுமாகக் காணப்பட்ட 71 வயது நஜீப், நீதிமன்ற வாசலில் செய்தியாளர்களை நோக்கி கையசைத்தார்.
வலது முழங்காலில் கடுமையான வீக்கம் மற்றும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் செப்டம்பர் 9-ம் தேதி நஜீப் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனால் ஒத்தி வைக்கப்பட்ட வழக்கு இன்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
பிரதமராக இருந்த போது தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி 1MDB-குச் சொந்தமான 230 கோடி ரிங்கிட்டை முறைகேடு செய்ததாக நஜீப் 4 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.
அதே தொகையை உட்படுத்திய 21 பணச்சலவைக் குற்றச்சாட்டுகளும், அந்த பெக்கொன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
2013 ஆண்டு மார்ச் 22 முதல் ஆகஸ்ட் 30 இடைப்பட்ட காலத்தில் அந்த 21 குற்றங்களையும் புரிந்ததாக, தற்போது சிறைவாசம் அனுபவித்து வரும் அவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.