
ஸ்ரீ நகர், ஏப்ரல்-25, 26 பேர் உயிரை பலிகொண்ட ஜம்மு – காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் என நம்பப்படும் 3 சந்தேக நபர்களின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அவர்களில் இருவர் பாகிஸ்தானியர்கள் என அடையாளம் கண்டுள்ள போலீஸ், அவர்களைக் கைதுச் செய்த துப்புக் கொடுத்தால் 20 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்குவதாக அறிவித்துள்ளது.
அவ்வறிவுப்பு அடங்கிய நோட்டீஸ் ஜம்மு காஷ்மீரில் பொது வெளியில் ஒட்டப்பட்டுள்ளது.
அம்மூவரும் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட தடைச் செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது.
செவ்வாய்க்கிழமையன்று பஹல்காம் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுப் பயணிகளைக் குறி வைத்து நடத்தப்பட்ட அத்தாக்குதலில், 25 இந்திய நாட்டவர்களும் ஒரு நேப்பாளியும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அண்மைய சில ஆண்டுகளில் பொது மக்கள் மீது நடத்தப்பட்ட மிகப் பெரியத் தாக்குதலில் இதுவும் ஒன்றாகும்.
இதனால் கடும் கோபமடைந்துள்ள இந்தியா, அத்தாக்குதலுக்குப் பொறுப்பானவர்களைப் பிடித்து நீதியின் முன் நிறுத்த உறுதி பூண்டுள்ளது.
இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக உடனடி பதிலடியாக 5 நடவடிக்கைகளையும் புது டெல்லி அறிவித்துள்ளது.
பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவையை அதிரடியாக நிறுத்தியுள்ளதும் அவற்றிலடங்கும்.
ஏற்கனவே வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் இரத்துச் செய்யப்படும்.
மருத்துவக் காரணங்களுக்காக வழங்கப்பட்ட விசா அனைத்தும் ஏப்ரல் 29 வரை மட்டுமே செல்லுபடியாகும்.
இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும், விசா காலாவதியாகும் முன்னர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.
அதேபோல், பாகிஸ்தான் சென்றுள்ள இந்தியர்களும் உடனடியாக தாயகம் திரும்ப இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது