2019–2024 காலக்கட்டத்தில் 21,114 இளம்பெண்கள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் – நேன்சி சுக்ரி அதிர்ச்சி தகவல்

2019–2024 காலக்கட்டத்தில் 21,114 இளம்பெண்கள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் – நேன்சி சுக்ரி அதிர்ச்சி தகவல்
கோலாலம்பூர், பிப்ரவரி 11 –
2019 முதல் 2024 வரையிலான காலக்கட்டத்தில், 19 வயது மற்றும் அதற்கு குறைவான 21,114 இளம்பெண்கள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக சுகாதார அமைச்சின் (KKM) பதிவுகள் தெரிவிக்கின்றன என்று பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் Datuk Seri Nancy Shukri குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரச்சினையைக் கட்டுப்படுத்துவதற்காக, பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றில் முக்கியமானது Dasar dan Pelan Tindakan Pendidikan Kesihatan Reproduktif dan Sosial (PEKERTI) திட்டமாகும்.
பல அமைச்சுகளின் ஒருங்கிணைப்புடன் Majlis Sosial Negara தளத்தின் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டம், பள்ளிகள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூக மட்டங்களில் இனப்பெருக்க மற்றும் சமூக ஆரோக்கியக் கல்வி குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், தேசிய மக்கள்தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியமான LPPKN வழியாக KafeTEEN இளைஞர் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது நாடு முழுவதும் 18 KafeTEEN மையங்கள், ஒரு நடமாடும் சேவை வாகனம் மற்றும் 143 பள்ளிகளில் செயல்படும் KafeTEEN கிளப்புகள் மூலம் இளைஞர்களுக்கு இனப்பெருக்க ஆரோக்கிய சேவைகள், ஆலோசனை மற்றும் மனநல ஆதரவு வழங்கப்படுகிறது.
சமூக நிலைத்தன்மையையும் குடும்ப அமைப்பையும் வலுப்படுத்த புதிய தேசிய குடும்பக் கொள்கை மற்றும் தேசிய குடும்ப செயல்திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என Nancy தெரிவித்தார்.
திருமணத்திற்கு முன் இளம்பெண் கர்ப்பம் போன்ற பிரச்சினைகளைத் தடுப்பது அனைவரின் ஒருங்கிணைந்த பொறுப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



