
கோலாலம்பூர், மார்ச்-1 -ஊழியர் சேமநிதி வாரியமான EPF அதன் சந்தாத்தாரர்களுக்கு 2024-ஆம் ஆண்டுக்கான இலாப ஈவாக 6.3 விழுக்காட்டை அறிவித்துள்ளது.
வழக்கமான சேமிப்பு, ஷாரியா சேமிப்பு என 2 வகையான சேமிப்புகளுக்குமே 6.3 விழுக்காடு ஈவுத் தொகை வழங்கப்படுகிறது.
மொத்த இலாபத் தொகை 73.24 பில்லியன் ரிங்கிட்டை உட்படுத்தியுள்ளதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் EPF கூறியது.
இந்த 6.3 விழுக்காட்டு இலாப ஈவானது, கடந்த மூன்று ஆண்டுகளாக இரு சேமிப்புகளுக்குமான ஈவுத்தொகையின் மேல்நோக்கிய போக்கைக் காட்டுகிறது.
2023-ஆம் ஆண்டுக்கு, வழக்கமான சேமிப்புகளுக்கு 5.5 விழுக்காடும் ஷரியா சேமிப்புக்கு 5.4 விழுக்காடுமாக EPF இலாப ஈவை அறிவித்தது.
அதற்கு முந்தைய ஆண்டில் வழக்கமான மற்றும் ஷரியா கணக்குகளுக்கு முறையே 5.35 விழுக்காடும் 4.7 விழுக்காடுமாக ஈவுத் தொகை வழங்கப்பட்டது.
உலக மற்றும் உள்நாட்டு சந்தைகளின் மீட்சி, நெகிழ்வான பொருளாதார வளர்ச்சி மற்றும் சிறந்த போர்ட்ஃபோலியோ மேலாண்மை ஆகியவற்றால் இந்த உயரிய இலாபம் சாத்தியமாகியிருப்பதாக, EPF தலைவர் தான் ஸ்ரீ ஜூகி அலி தெரிவித்தார்.
அதோடு கடந்தாண்டு EPF பதிவுச் செய்த மொத்த முதலீட்டு வருமானமும் 11 விழுக்காடு அதிகரித்து 74.46 பில்லியன் ரிங்கிட்டாகப் பதிவாகியது.
2023-ல் அத்தொகை 68.99 மில்லியன் ரிங்கிட்டாக மட்டுமே இருந்தது.
EPF வருமானம் கடந்தாண்டின் மூன்றாவது காலாண்டில் ஊக்கமளிக்கும் வகையில் இருப்பதன் அடிப்படையில், சந்தாத்தாரர்கள் நல்ல இலாப ஈவை எதிர்பார்க்கலாம் என, இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமிர் ஹம்சா அசிசான் முன்னதாகக் கோடி காட்டியிருந்தார்.
அதே சமயம் இலாப ஈவு 6 விழுக்காட்டுக்கும் மேல் இருக்குமென பொருளாதார நிபுணர்களும் கல்வியாளர்களும் ஏற்கனவே கணித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.