
கோலாலாம்பூர், ஏப்ரல்-24 – நீண்ட காலம் எழுத்துத் துறையில் இருப்பவரும், 10 ஆண்டுகளுக்கும் மேலாத் தேர்வு வழிகாட்டி நூல்களை உருவாக்கி தடம் பதித்து வருபவருமான விக்னேஸ்வரி சாம்பசிவம் எழுதிய ‘கதம்பம்’ எனும் சிறுகதை, கவிதை மற்றும் கட்டுரைத் தொகுப்பு நூலின் வெளியீட்டு விழா, நேற்று கோலாலாம்பூர் பிரிக்பீல்ட்ஸில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மலேசிய கண்பார்வையற்றோர் சங்க மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, ம.இ.கா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் தலைமை தாங்கினார்.
விழாவில் சிறப்புரையாற்றிய அவர், விக்னேஸ்வரியின் இலக்கியப் பங்களிப்பைப் பாராட்டி, நூலின் முதல் பிரதியை வெளியிட்டுச் சிறப்பித்தார்.
தொழிலதிபர் டத்தோ எஸ்.எம். முத்து முதல் நூலைப் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் முனைவர் ராஜேஷ் இராமசாமி, முனைவர் முல்லை இராமையா, எழுத்தாளர் கோபாலன் @ தமிழரசு உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
நூலாசிரியரின் புதல்வரும் இயக்குநருமான தீபன் எம்.விக்னேஷ் மற்றும் குடும்ப உறுப்பினர்களும் இதில் பங்கேற்றனர்.
5,000 ரிங்கிட் கொடுத்து நூலை வாங்கி ஆதரவளித்த டத்தோ ஸ்ரீ சரவணன், பின்னர் வணக்கம் மலேசியாவிடம் பேசிய போது, ஆய்வு நூல்கள் எழுதுவதைப் படைப்பாளர்கள் பழக்கமாக்கிக் கொண்டால் சிறப்பாக இருக்குமென்றார்.
நூலாசிரியர் விக்னேஸ்வரி சாம்பசிவம் தனது இம்முயற்சி குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.
தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் எழுத்தாளர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வு, உள்ளூர் இலக்கியத் துறைக்கு மற்றுமொரு மகுடமாக அமைந்தது.



