Latestமலேசியா

கங்காரில் நீடிக்கும் மர்மம்: மனித எலும்புகள் இருந்த இரண்டாவது சாக்குப்பை கண்டெடுக்கப்பட்டது

கங்கார், ஆகஸ்ட்-06-பெர்லிஸ், கங்காரில் மேலும் ஒரு சாக்குப்பையைக் காவல் துறையினர் கண்டெடுத்துள்ளனர். அதனுள் இருந்தவை மனித எலும்புகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கடந்த ஜூலை 26 ஆம் தேதி மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட Behor Mali எனும் இடத்திலிருந்து 31.1 மீட்டர் தொலைவில் அச்சாக்குப்பை மீட்கப்பட்டது. அதனை அடுத்து காவல் துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

நேற்று காலை தமது மகள் புதிதாக வாங்கியிருந்த நிலத்தில் அடர்ந்த செடி-கொடி மற்றும் புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த 61 வயதுடைய வணிகர் ஒருவர் முதலில் அச்சாக்குப்பையைக் கண்டார். பழையதாகவும் கிழிந்தும் இருந்த அந்த வெள்ளை நிறச் சாக்குப்பையிலிருந்து சிதறிய நிலையில் வெளியே தெரிந்தவாறு இருந்த அடையாளம் தெரியாத பல எலும்புகளும் இருந்தன.

MUDA விவசாய மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நிலத்தின் எல்லைக்கு அருகில், அடர்ந்த செடி-கொடிகளுக்கு இடையே பாதி புதைக்கப்பட்ட நிலையில் அந்தச் சாக்குப்பை இருந்ததாக கங்கார் மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் Yusharifuddin Mohd Yusop தெரிவித்தார்.

அச்சாக்குப்பைக்கு அருகே, நீண்ட காலமாக கைவிடப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் பழைய மற்றும் கிழிந்த உள்ளாடை, அரைக்கால் சட்டை மற்றும் இடுப்புப் பட்டை உள்ளிட்ட பல பொருட்களையும் காவல்துறையினர் கண்டெடுத்தனர். அந்த எலும்புகளும் பொருட்களும் நீண்ட காலமாகவே அந்த இடத்தில் இருந்திருக்கலாம் என கருதுவதாக Yusharifuddin கூறினார்.

மீட்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் கெடா, Alor Serraரில் உள்ள Sultana Bahiyah மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதே சமயம் அச்சம்பவத்தைக் காவல் துறை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.

குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் காணாமல் போயிருந்தால், விசாரணைக்கு உதவ அருகிலுள்ள காவல் நிலையத்தை அணுகுமாறு காவல்துறையினர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!